PUBLISHED ON : ஜூலை 28, 2026 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, கர்நாடக முதல்வருடன் தமிழக முதல்வர் விஜய் பேச்சு நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது விவகாரம் குறித்து அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூட்டத்தை, முதல்வர் விஜய் கூட்ட வேண்டும். அனைவரது கருத்துக் களின் அடிப்படையில், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: இந்த விவகாரத்தில், ஸ்டாலின் மற்றும் உங்களது கோரிக்கை ரெண்டும் ஒரே மாதிரி இருக்கே... உங்க இரண்டு கட்சிகளுக்கும் இடையே ரகசிய உறவு இருக்குன்னு த.வெ.க.,வினர் சொல்றதை, 'டவுட்' இல்லாம நிரூபிக்கிறீங்களே!
------
அ.ம.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மன்னார்குடி எம்.எல்.ஏ., காமராஜ்: பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் யாரிடம் உள்ளனரோ, அவர்களிடம் தான் கட்சி இருக்கிறது. விரைவில் அ.ம.மு.க., பொதுக்குழுவை கூட்டி, என்னிடம் தான் கட்சி இருக்கிறது என்பதை நிரூபிப்பேன். கடைசியாக நடந்த அ.ம.மு.க., பொதுக்குழு கூட்டத்தை நானும், சிலரும் சேர்ந்து தான் நடத்தினோம். பொதுக்குழு கூட்டம் கூட நடத்த முடியாத தினகரன் கட்சி நடத்த முடியுமா?
டவுட் தனபாலு: இதே கேள்வியை தான், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பார்த்து, அந்தக் கட்சியின் அதிருப்தி அணியினரும் கேட்கிறாங்க... பொதுக்குழுவை கூட்டினால், தங்களது பலவீனம் அம்பலமாகிடும்னு பழனிசாமியும், தினகரனும் பயப்படுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
----
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் விஜய் பேச்சு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ், தமிழக அரசிலும் பங்கு வகிக்கிறது. எனவே, கண்துடைப்புக்காக இது போன்ற பேச்சு நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. காவிரி போன்ற தமிழகத்தின் தலையாய பிரச்னைகளில் அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே செயல்பட வேண்டும்.
டவுட் தனபாலு: காவிரி பிரச்னைக்காக உங்க தந்தை கருணாநிதியும், நீங்களும் எத்தனையோ முறை அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தினீங்களே... அதனால, எந்த பலனாவது கிடைச்சிருக்கா...? புதுசா ஒரு முயற்சியை விஜய் எடுத்து, அது வெற்றி பெற்று விட்டால், அரசியலில் அவர் இன்னும் வலிமையாகிடுவார்னு பயப்படுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
