PUBLISHED ON : ஆக 06, 2026 12:46 AM

பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தஞ்சாவூரில் நடந்த போராட்டத்தில், முதல்வர் விஜயை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், மோசமான உள் அர்த்தம் கொண்ட கொச்சையான வார்த்தைகளை தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேசியிருப்பது, கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் கண்டிக்கத்தக்கது. அவரது சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால், அது தி.மு.க.,விற்கு நல்லதல்ல.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... அடுத்து, தி.மு.க.,வின் தலைமை பீடத்துக்கும், தமிழக மக்கள் மீண்டும் ஏமாந்து ஓட்டு போட்டால், முதல்வர் பதவிக்கும் வரத் துடிக்கும் உதயநிதி, தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியையே துாக்கி சாப்பிட்டுட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: மாமல்லபுரத்தில் நடந்த காங்., மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுலிடம், 'உள்ளாட்சித் தேர்தலில், த.வெ.க., கூட்டணியில், 40 சதவீதம் இட ஒதுக்கீடு பெற வேண்டும்' என, மாவட்டத் தலைவர்கள் வலியுறுத்தினர். தமிழகம் முழுதும் உள்ள 65,000 'பூத்' கமிட்டிகளுக்கு தலா மூன்று உறுப்பினர்களை, 90 நாட்களுக்குள் நியமிக்கும்படி ராகுல் அறிவுறுத்தினார்.
டவுட் தனபாலு: அது சரி... 65,000 பூத் கமிட்டிகளுக்கும் தலா மூணு பேர் என்றால், 1.95 லட்சம் பேர் வருதே... தமிழகத்துல காங்., கட்சியில இருக்கிற அத்தனை பேருக்கும் பதவிகள் வழங்கும்படி ராகுல் உத்தரவு போட்டிருக்காரோ என்ற, 'டவுட்' தான் வருது!
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: செய்தியாளர்களைப் பார்த்தால், நீர் வளத்துறை அமைச்சர் ஆனந்த், திருடன் மாதிரி தலைதெறிக்க ஓடுகிறார். திருட்டு லாட்டரி விற்கும் ஒரு அமைச்சர்; திருட்டு, 'விசிடி' விற்ற ஒரு அமைச்சர்; 'பிளாக் டிக்கெட்' விற்கும் ஒரு அமைச்சர்; உருட்டுக்கட்டையோடு சுற்றும் ஒரு அமைச்சர்; போதை பவுடர் அமைச்சர் என, த.வெ.க., அரசின் மொத்த அமைச்சரவையும், 'ஜோக்கர்' கூட்டமாக அமைந்துள்ளது.
டவுட் தனபாலு: கடந்த முறை நீங்க நடத்திய ஆட்சி மட்டும் ஒழுங்கா...? 'பஸ்களில் பெண்கள் ஓசி பயணம் போறாங்க'ன்னு எகத்தாளமா பேசிய பொன்முடி, 'தாய்க்கும், மகளுக்கும் ஒரே தொகை' என, மகளிர் உதவித்தொகையை மட்டமாகப் பேசிய துரைமுருகன், 'டாஸ்மாக்' மது விற்பனையில் முறைகேடு பண்ணிய செந்தில் பாலாஜி எல்லாம் அப்பழுக்கற்றவர்களா என்ற, 'டவுட்' தான் வருது!
