PUBLISHED ON : ஆக 24, 2026 12:13 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: 'என் மேஜையில் மூன்று கோப்புகள் இருக்கின்றன; அவற்றை திறப்பேன்' என்கிறார் முதல்வர் விஜய். திறங்கள்; எங்களுக்கு கவலை இல்லை. விஜய் ஆட்சியில், 100 நாட்களில் நடந்த ஊழல்கள் பற்றி, நாங்களும் தகவல்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். முதல்வருக்கு புதிய அறை அமைப்பது, பழனி கோவில் சொத்து ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது. நீங்கள் அந்த கோப்புகளை திறந்தால், நாங்கள் இந்த கோப்புகளை திறப்போம்.
டவுட் தனபாலு: கடந்த தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்களா இருந்தவங்க நல்லா சம்பாதிச்சாங்க... உங்களுக்கு எந்த பதவியும் தராத விரக்தியில இருந்தீங்க... அதனால, சம்பாதிச்சவங்க எல்லாம் ஜெயிலுக்கு போகட்டும்னு திட்டம் போட்டு, முதல்வர் விஜயை உசுப்பேத்தி விடுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
த.மா.கா., தலைவர் வாசன்: தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு பின், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய கட்சிக்கு மக்கள் வாய்ப்பளித்து உள்ளனர். அதனால், கூட்டணி கட்சிகளுக்கு இனி முக்கியத்துவம் இல்லை என்று அர்த்தமல்ல. இனி வரும் தேர்தல்களை, பெரும்பாலான கட்சிகள், கூட்டணியோடு தான் சந்திக்கும். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றுக்கு பின்னரே, மக்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பது தெரியும்.
டவுட் தனபாலு: அது சரி... தமிழகத்தில் இருக்கும் முக்கிய கட்சிகள் எல்லாம், 'கூட்டணி வேண்டாம்'னு போயிட்டா, குட்டி கட்சிகள் பாடு திண்டாட்டமாகிடுமே... குறிப்பா, ஒரு அறைக்குள்ள கட்சியின் பொதுக் குழுவை நடத்திய உங்க கட்சிக்கு ரொம்பவே பாதிப்பு ஏற்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணியில் 23 கட்சிகள் இருக்கின்றன; வெறும் மூன்று கட்சிகள் தான் விலகியுள்ளன; அவர்களையும் நாங்கள் வெளியேற சொல்லவில்லை. தி.மு.க., இல்லை என்றால், 'இண்டி' கூட்டணி பலமில்லாதது போல், தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறுவது வேடிக்கையாக உள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... கவுரவர்கள் 100 பேர் இருந்தாலும், ஐந்து பேரா இருந்த பஞ்ச பாண்டவர்கள் தானே போர்ல ஜெயிச்சாங்க... அந்த மாதிரி, 23 கட்சிகள் இருந்தாலும், தி.மு.க., போன்ற பெரிய கட்சி உங்க கூட்டணியில் இருந்து விலகியதுல, உங்களுக்கு தான் நஷ்டம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
