PUBLISHED ON : ஆக 31, 2026 12:32 AM

காங்., கட்சியைச் சேர்ந்த, கரூர் - எம்.பி., ஜோதிமணி: மோடி அரசை அச்சமற்ற முறையில் எதிர்த்து, வீழ்த்தக்கூடிய வல்லமை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு மட்டுமே உள்ளது. 2029ல் ராகுல் தான் பிரதமர். 'மீண்டும் பிரதமராக மோடி வருவார்' எனவும், ராகுல் பின்தங்கியிருப்பதாகவும் சமீபத்தில் கருத்து கணிப்புகள் வந்தன; இவை கருத்து திணிப்புகள். மோடியின் வீழ்ச்சி வெளிப்படையாக தெரிவதை மறைக்க, இதுபோன்ற கருத்துக்களை பரப்புகின்றனர்.
டவுட் தனபாலு: அது சரி... காங்., கட்சியின் தலைவராக, 2017ல் ராகுலை நியமிச்சாங்களே... 2019 லோக்சபா தேர்தல் தோல்வியை தாங்க முடியாம, 18 மாசத்துலயே அந்த பதவியில் இருந்து ராகுல் விலகிட்டாரே... தப்பி தவறி ராகுல் பிரதமர் ஆகிட்டாலும், 150 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை நிர்வாகம் பண்ண முடியாம, பாதியில ஓட்டம் பிடிக்க மாட்டார்னு, 'டவுட்' இல்லாம உங்களால சொல்ல முடியுமா?
காங்., கட்சியைச் சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: நாட்டில் இரு விதமான அமைப்புகளை, பிரதமர் மோடி அரசு உருவாக்கியுள்ளது. ஒன்று கோடீஸ்வரர்களுக்கானது; மற்றொன்று ஏனைய மக்களுக்கானது. கடன் செலுத்த தவறினால், விவசாயிகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், சில தொழிலதிபர்கள் வங்கி பணத்தை தங்கள் சொத்தாகவே நினைக்கின்றனர்.
டவுட் தனபாலு: மத்தியில் உங்க கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்தப்ப தான், வங்கியில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கிட்டு, 'டிமிக்கி' குடுத்த விஜய் மல்லையா, ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் மோசடியில் ஈடுபட்ட லலித் மோடி எல்லாம் வெளிநாடு களுக்கு தப்பி ஓடினாங்க என்பதை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கடந்த 2018 ஆக., 28ல், தி.மு.க., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும் என செயற்குழுவில் பேசியிருந்தேன். கட்சி தலைவராக ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கட்சி நலனை முன்னிறுத்தி செய்யப்படும் இந்த மறுசீரமைப்புக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டும்.
டவுட் தனபாலு: கட்சியின் கிளை, ஒன்றியம், நகரம், மாவட்ட நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் பண்ணியிருக்கீங்களே... நல்ல விஷயம் தான்... அதேநேரம், இவங்களை எல்லாம் வழிநடத்தப் போற தலைவர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு மட்டும் எந்த வயது வரம்பும் நிர்ணயிக்காதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
lll
