PUBLISHED ON : ஆக 30, 2026 01:28 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி:
கடந்த 2010க்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 'டெட்' எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்ற படிக்கட்டுகளில் தமிழக அரசு ஏறி கொண்டிருப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு தீவிர பயிற்சி அளித்து, 'டெட்' தேர்வில் வெற்றி பெற வைத்தால், ஆசிரியர்களின் தரம் உயரும்; அரசு பள்ளிகளில் கல்வியின் தரமும் மிளிரும்.
டவுட் தனபாலு: மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கே தகுதி இல்லை என்றால், நாட்டின் எதிர்கால தலைமுறை தானே பாதிக்கப்படும்... இதை, தமிழக அரசு உணரவில்லையா அல்லது ஆசிரியர்களின் ஓட்டு வங்கிக்காக, மாணவர்கள் நலன் எக்கேடு கெட்டால் என்னன்னு நினைக்கிறதா என்ற, 'டவுட்' தான் எழுது!
பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு:
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக கூறி முடித்து வைக்கப்பட்டது. எனினும், மழைக்கால தொடரின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடியும்; அதற்கான வாய்ப்பு உள்ளது. சபையை கூட்டும்படி, ஜனாதிபதியிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்து, பல முறை சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான சட்ட விதிகளும் உள்ளன.
டவுட் தனபாலு: நீங்க என்ன தான் சட்ட விதிகளின்படி பார்லிமென்டை கூட்டினாலும், அதை நடத்த விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு உள்ளே வரும் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை வச்சுக்கிட்டு, என்ன தான் பண்ண முடியும்...? பார்லிமென்டை மீண்டும் கூட்டினாலும், மக்களின் வரிப்பணம் தான் பாழாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் நளின் கோஹ்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் இன்று நடத்தும் பேரணிக்கு, அந்நகர மேயர் மம்தானி மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பன்முகத் தன்மையை தொடர்ந்து வலியுறுத்தும் மம்தானியின் இந்த செயல்பாடு முரணாக உள்ளது; இது குறித்து அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: நியூயார்க் மேயர் மம்தானி, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் தானே... இங்கிருக்கும் சிலர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை கண்ணை மூடிட்டு எதிர்ப்பது போலவே அவரும் எதிர்க் கிறார்... அதேநேரம், அவரால நியூயார்க் பேரணிக்கு செலவில்லாத விளம்பரம் கிடைச்சிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
