PUBLISHED ON : செப் 02, 2026 01:41 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: அடுத்த பிரதமர் விஜய் என த.வெ.க.,வினர் பேசி வருகின்றனர். கற்பனைக்கு எல்லையே கிடையாது; என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். விஜய் பிரதமராக வர வேண்டும் என த.வெ.க.,வினர் சொன்னாலே, ராகுல் பிரதமர் வேட்பாளர் இல்லை என முடிவு செய்து விட்டதாகத் தானே அர்த்தம். இந்த முடிவை அறிந்து, காங்கிரசாருக்கு சொரணை இருந்தால், கூட்டணியில் இருந்து வெளியே வரட்டும் பார்க்கலாம்.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட 60 வருஷங்களுக்கு பிறகு, தமிழகத்துல காங்கிரசார் ரெண்டு பேர் அமைச்சர்களாகி இருக்காங்க... 'நாம தராத பங்களிப்பை த.வெ.க., அரசு தந்துடுச்சே' என்ற பொறாமை புகை, உங்க காதுல இருந்து வருவது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதான், காங்கிரசாரை உசுப்பேத்தி பார்க்கிறீங்க... இதுக்கெல்லாம் காங்கிரசார் அசராமல், 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்' என, கூவ மட்டும் செய்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்: ஒழுக்கத்தையும், நற்பண்பு களையும் வளர்க்காமல், வெறும் பட்டத்தை மட்டுமே வழங்கும் கல்வி முழுமையற்றது; அதனால் பயன் ஏதுமில்லை. கல்வியை விட ஒழுக்கமே மிக முக்கியமானது. ஒருவரது சுபாவத்தில் பணிவும், குணத்தில் ஒழுக்க நெறியும் இல்லையென்றால், அவர் எவ்வளவு படித்தவராக இருந்தாலும், கொடூரமான மிருகத்தைவிட ஆபத்தானவராக இருப்பார்.
டவுட் தனபாலு: பட்டம் என்பது, படிச்ச படிப்புக்கு ஒரு அங்கீகாரம் மட்டுமே... ஒழுக்கமும், நற்பண்பும் தான், ஒரு மனிதனை சமூகத்தில் உயர்த்தும்... படிக்காத மேதைகளான காமராஜர், எம்.ஜி.ஆர்., போன்ற தலைவர்களின் வாழ்க்கையே இதற்கு உதாரணங்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம்: எதிர்காலத்தில் கரப்பான் பூச்சி கட்சி, ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், தேசிய அளவில் மூன்றாவது சக்தியாக வருமா என்று சொல்ல முடியாது. அசாம் மாநிலத்தில், 1985ல் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் வாயிலாக, அசாம் கண பரிஷத் கட்சி ஆட்சியை பிடித்தது. இளம் தலைமுறையினர் போராட்டத்திற்கு பின், அண்டை நாடான நேபாளத்தில், முன்னாள் 'ராப்' பாடகர் பாலேந்திர ஷா ஆட்சியை பிடித்தார்; அதுபோல இந்தியாவிலும் நடக்கலாம்.
டவுட் தனபாலு: வாய் தவறிக்கூட, 'காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்; ராகுல் பிரதமராவார்'னு சொல்ல மாட்டேங்கிறீங்களே... உங்க கட்சி மீதான நம்பிக்கை உங்களுக்கே போயிடுச்சா அல்லது நடிகர் வடிவேலு காமெடி போல, 'ராகுல் எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்'னு, உங்க அனுபவத்தின் மூலம் கண்டுபிடிச்சிட்டீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!
