தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : செப் 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு:


'முதல்வர் விஜயை பிரதமராக அமர வைப்போம்' என கூறுவது, த.வெ.க.,வினரின் விருப்பம். தங்கள் உணர்வை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். நாங்கள் கூட எங்கள் கட்சித் தலைவரை முதல்வராக்க வேண்டும் என கூறுகிறோம். இந்த விஷயங்களில் மக்கள் தான் முடிவெடுப்பர் என்பதால், அதை தவறு என சொல்ல முடியாது.

டவுட் தனபாலு:


அது சரி... 'நாங்க கூட திருமாவளவன் முதல்வராகணும்னு பேசுறோம்... ஆனா, அவரால முதல்வராகவே முடியாது... அதுபோல, த.வெ.க.,வினர் எவ்வளவு தான் சொன்னாலும், விஜயாலும் பிரதமராகிட முடியாது'ன்னு, நாசுக்கா சுட்டிக் காட்டுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

-----

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்:


தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்ததில், பழிவாங்கல் நடவடிக்கை எதுவும் இல்லை. த.வெ.க., ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை. 'த.வெ.க., ஆட்சி நீடிக்காது' என தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் சொல்லி வருகின்றன. இதில் இருந்தே அந்த இரு கட்சிகளும் சேர்ந்திருப்பது தெரிகிறது. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

டவுட் தனபாலு:


ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இருக்கு... இதுவரை பா.ஜ., எதிர்ப்பு என்ற நிலையில் தான் தி.மு.க., இயங்கிட்டு இருக்கு... நீங்க தான் அடிக்கடி, அந்த மூன்று கட்சிகளும் சேர்ந்துடும்னு சொல்லிட்டு இருக்கீங்க... உங்களது இந்த கருத்தே, 'த.வெ.க.,வை வீழ்த்த, நாம மூணு கட்சிகளும் ஏன் ஒண்ணு சேரக்கூடாது?' என்ற எண்ணத்தை உருவாக்கிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

------

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி:


தமிழக அரசுக்கு ஓராண்டில் வரும் 55 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை இழக்க மனமும் இல்லாமல், 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூட துணிவும் இல்லாமல் ஆட்சியாளர்கள் திண்டாடுகின்றனர். மது உற்பத்தி முதல், காலி பாட்டில் விற்பனை வரை எங்கும் ஊழல், எதிலும் ஊழல். மது உடலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்பது மட்டுமல்லாமல், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் விளங்குகிறது. எனவே, டாஸ்மாக்கை முற்றிலும் விட்டொழிப்பதே சரியான தீர்வு. கூழுக்கும், மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட வேண்டாம்.

டவுட் தனபாலு:


இவர் சொல்றது நுாற்றுக்கு நுாறு உண்மை... 'டாஸ்மாக்' நிர்வாகத்தின் அடி முதல் நுனி வரை ஊழலில் ஊறிப்போய் கிடக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை... தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தினால், பாதிக்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் குறைஞ்சிடும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us