PUBLISHED ON : செப் 10, 2026 12:56 AM

பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: முதல்வர் விஜய், தி.மு.க., செய்த ஊழல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி, அவர்களை ஓட ஓட விரட்டி வருகிறார். தி.மு.க.,வின் வீராணம் முதல், விஞ்ஞான ரீதியிலான ஊழல் குறித்து பேசினால் ஆதாரம் கேட்போருக்கு, தற்போது ஆதாரத்துடன் முதல்வர் விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். த.வெ.க.,வுடன் எனக்கு மாற்றுக் கருத்தும், கொள்கை முரண்பாடும் இருந்தபோதிலும், ஊழல் விவகாரங்களை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுகள்.
டவுட் தனபாலு: எதுக்கும் ஜாக்கிரதையா கருத்து சொல்லுங்க... நாளைக்கே உங்க கூட்டணிக்கு தி.மு.க., வந்துட்டா, அவங்களுடன் சேர்ந்து த.வெ.க.,வை வசைபாட வேண்டியிருக்குமே... அந்த நேரம், இப்ப நீங்க பேசியதை எடுத்துக்காட்டி, த.வெ.க.,வினர் உங்களுக்கு பதிலடி தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., நடத்தப்பட்ட விதத்தால் எங்கள் கட்சியினர் மனமுடைந்தனர். 100 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே, தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகினோம்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... உங்க கட்சிக்கு நாலு, 'சீட்'களை மட்டும் கொடுத்துட்டு, அதுலயும் உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்கணும்னு தி.மு.க.,வினர் நிர்ப்பந்தம் செய்தாங்க என்பது உண்மை தான்... ஆனா, அப்பவே நீங்க ரோஷப்பட்டு கூட்டணியில் இருந்து வெளியில் வந்திருந்தால், 'டவுட்' இல்லாம தங்களை பாராட்டியிருக்கலாமே!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தமிழ் சமூகத்துக்கு நாங்கள் என்ன செய்தோம் என்ற வரலாறு, த.வெ.க.,விற்கும், முதல்வர் விஜய்க்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கருணாநிதி குறித்தும், தி.மு.க., குறித்தும் அவதுாறாக பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்துக்கு வைத்திருப்பர்? எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும்.
டவுட் தனபாலு: சட்டசபையில் விஜய் பேசியதை தான் நீங்க குறை சொல்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதே நேரம், அவர் கையில் அடுக்கடுக் கான ஆதாரங்களை வச்சுட்டு தானே பேசினார்... 'அந்த ஆதாரங்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவை'ன்னு உங்களால சொல்ல முடியுமா என்ற, 'டவுட்' வருதே!
