PUBLISHED ON : செப் 18, 2026 01:43 AM

தி.மு.க.,வைச் சேர்ந்த, அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன்: சட்டசபை தேர்தலில், புதுச்சேரியில் தி.மு.க., 13 தொகுதிகளில் போட்டியிட்டு, மீதி 17 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தந்தது. தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை; வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தோம். புதுச்சேரியில் தி.மு.க., தனியாக நின்றிருந்தால், 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்.
டவுட் தனபாலு: புதுச்சேரியில் உங்களுக்கு என்ன நடந்துச்சோ, அதையே தான் தமிழகத்துல உங்க கூட்டணி கட்சிகளுக்கு நீங்க செய்தீங்க... தமிழக சட்டசபை தேர்தலப்ப உங்க கட்சி நடத்திய நாட்டாமையால் தான், தேர்தலுக்கு பிறகு உங்க கூட்டணி கட்சிகள் எல்லாம், த.வெ.க., முகாமுக்கு தாவிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி.க., தலைவர் திருமாவளவன்: த.வெ.க.,வுடன் ஐந்து ஆண்டுகள் துணை நிற்போம் என்பதை உறுதிப்படுத்தவே, அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேர்தலுக்கு பின், த.வெ.க.,வினர் ஆதரவு கேட்டனர்; ஆதரவு அளித்ததால், அமைச்சர் பதவி வழங்கியுள்ளனர். ஒருவேளை, தி.மு.க., கூட்டணி வென்றிருந்தால், அமைச்சரவையில் வி.சி.க.,வுக்கு இடம் கிடைத்திருக்குமா?
டவுட் தனபாலு: தி.மு.க., ஜெயித்திருந்தால், கண்டிப்பா உங்க கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தந்திருக்க மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் ஏற்கனவே அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இரு தொகுதிகளிலும் குதிரை பேரம் நடத்தி, எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுத்து, தற்போது அவர்களையே வேட்பாளராக, த.வெ.க.,வினர் நிறுத்தியுள்ளனர். மக்கள், அவர்களை நிச்சயம் தோற்கடிப்பர்; அ.தி.மு.க., கண்டிப்பாக வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: ஏற்கனவே, உங்க கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச, எம்.எல்.ஏ.,க்களை உங்களால தக்கவச்சுக்க முடியலையே... தப்பி தவறி இடைத்தேர்தலில் உங்க கட்சி வேட்பாளர்கள் ஜெயிச்சிட்டாலும், அவங்க அஞ்சு வருஷமும் உங்க கட்சியிலயே நீடிப்பாங்கன்னு உங்களால உத்தரவாதம் தர முடியுமா என்ற, 'டவுட்' வருதே!
