PUBLISHED ON : செப் 17, 2026 12:43 AM

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: அடுத்த கட்சியின் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்ததால், இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் வெற்றி, இந்த ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக இருக்க வேண்டும். அதற்கு, தி.மு.க.,வினர் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். இடைத்தேர்தலில், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
டவுட் தனபாலு: கடந்த அஞ்சு வருஷம் ஆளுங்கட்சியா இருந்து, நீங்களும் சில இடைத்தேர்தல்களை சந்திச்சிருக் கீங்க... 'இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும்' என்ற, 'பார்முலா'வை உருவாக்கியதே உங்க கட்சி தான்... அதே, 'பார்முலா' இப்ப உங்களை திருப்பித் தாக்கும் என்பதால, நீங்க அடக்கி வாசிப்பதே நல்லது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், காங்., - பா.ஜ., அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை, தி.மு.க., - எம்.பி., கனிமொழி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிந்ததும், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்தித்து பேச உள்ளார்.
டவுட் தனபாலு: ஏற்கனவே, நம்ம நாட்டில் மூன்றாவது அணி முயற்சிகளை ரெண்டு, மூணு முறை எடுத்தாங்க... ஆனா, பா.ஜ., அல்லது காங்., ஆதரவுல, 1989 மற்றும் 1996ல் அமைந்த மூன்றாவது அணியின் ஆட்சி அஞ்சு வருஷம் நீடிச்சதா சரித்திரமே இல்லை... அதனால, கனி மொழி எடுக்கும் முயற்சிக்கு ப லன் கிட்டுமா என்பது, 'டவுட்' தான்!
தி.மு.க.,வைச் சேர்ந்த, நீலகிரி எம்.பி., ராஜா: தியாகத்தில் விளைந்த எங்கள் தலைவர் ஸ்டாலின் அடையாளத்தை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் கொச்சைப் படுத்தி, த.வெ.க.,வினர் சிலர் ஏளனம் செய்தனர். அதனால் ஏற்பட்ட வலியை உணர்த்த, ஏளனம் செய்தவரின் அடையாளத்தை கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கு வருத்தம் தான். என் வார்த்தைகளை திரும்ப பெறுவதில் எனக்கு தயக்க மில்லை. நீங்கள் திருந்தா விட்டால் திருத்தப்படுவீர்.
டவுட் தனபாலு: மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் குறித்து ஆபாசமா பேசிட்டு, இப்ப வருத்தம் தெரிவிச்சா சரியா போயிடுமா...? உங்க பேச்சை, உங்க கட்சியின் பெண் தலைவர்களே கண்டிச்சதால தான், வேண்டா வெறுப்பா வருத்தம் தெரிவிச்சிருக்கீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
