PUBLISHED ON : செப் 20, 2026 01:00 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: தமிழக மக்கள் செய்த தவறால் ஆட்சியில் அமர்ந்து கொண்டு, எங்கள் தியாகத்தை த.வெ.க.,வினர் கொச்சைப்படுத்துகின்றனர். மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல, மக்கள் இன்னும் மயக்கத்தில் தான் உள்ளனர். மின் கட்டணம் உயர்ந்து வந்த பில்லை பார்த்து, மக்களுக்கு இப்போது தான் கொஞ்சம் சொரணை வந்துள்ளது.
டவுட் தனபாலு: உங்களுக்கு ஓட்டு போடாம இருந்துட்டா, மக்கள் சொரணை கெட்டு போனவங்களா...? இப்படி ஏடாகூடமா பேசி பேசி தானே இன்னைக்கு மூலையில முடங்கி போய் உட்கார்ந்திருக்கீங்க... இனியும் இப்படியே பேசிட்டு இருந்தீங்க என்றால், தி.மு.க.,வுக்கு மக்கள் சீக்கிரமே முடிவுரை எழுதிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி காமராஜா, தன் ஆதரவாளர்கள் 500 பேருடன் பா.ஜ.,வில் இணைந்துள்ளார். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றி, தன்னலமற்று மக்கள் சேவையில் ஈடுபடும் தாமரை படையில் இணைந்துள்ள புதிய சொந்தங்களை, மக்கள் பணிக்கு மனமார வரவேற்கிறேன்.
டவுட் தனபாலு: ஏற்கனவே, உங்க கட்சியில் இருந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை வெளியில போயிட்டதால, அந்த இடத்தை நிரப்ப காமராஜாவை கொண்டு வந்திருக்கீங்களோ என்ற, 'டவுட்' வருது... அதேநேரம், அண்ணாமலை மாதிரி காமராஜாவும் அதிரடி அரசியல்ல இறங்கினா, அவரையாவது நீங்க வளர விடுவீங்களா என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!
வி.சி.க., தலைவர் திருமாவளவன்: சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டபோது, அதை வரவேற்று, அதற்கான காரணங்களை கூறிய ஒரே கட்சி வி.சி.க., தான். இன்றும்கூட, 'தே.மு.தி.க.,வை ஏன் கூட்டணியில் சேர்த்தீர்கள்; ஏன் அதிக தொகுதிகள் கொடுத்தீர்கள்' என்று நான் பேசவில்லை. ஆனால், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, நாங்கள் ஏதோ காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசுவதாக நினைத்து, வி.சி.க.,வை விமர்சித்து வருகிறார்.
டவுட் தனபாலு: ஆனா, 10 தொகுதிகள் வாங்கிய தே.மு.தி.க., அதுல ஒன்றில் தானே ஜெயிச்சிருக்கு... எட்டு தொகுதிகள் வாங்கிய நீங்க, ரெண்டு இடங்களில் ஜெயிச்சிருக்கீங்க... அதுவும் இல்லாம, நீங்க ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்து, அமைச்சரவையிலும் இடம் பிடிச்சிட்டீங்க... 'தே.மு.தி.க.,வை யாரும் கண்டுக்கவே இல்லை என்ற ஆதங்கத்தில் பிரேமலதா விமர்சிக்கிறாங்களோ' என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
