PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா: ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டு, காவிரி நீர் வாரிய குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பிக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டாலும் கேட்கின்றனர். இரண்டரை ஆண்டுகள் ராஜ்யசபாவில் இருப்பேன். காவிரிக்காக சாகும் வரை போராடுவேன். மாநில மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை.
டவுட் தனபாலு: இந்த நாட்டிற்கே பிரதமரா இருந்தவர் நீங்கள்... என்ன தான் தேர்தலுக் காக பேசினாலும், தண்ணீர் போன்ற ஜீவாதார பிரச்னையில், இப்படி தன் சொந்த மாநிலத்திற்காக மட்டும் வரிந்து கட்டிட்டு, உங்களை ஒரு குறுகிய வட்டத்தில் சுருக்கிக் கொள்வது அழகா என்ற, 'டவுட்' வருதே!
ஒடிசா மாநில தலைமைச்செயலர் பிரதீப் குமார் ஜெனா: மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நோயாளிகளுக்கு வழங்கும், 'பிரிஸ்கிரிப்ஷன்' எனப்படும் மருத்துவ குறிப்புக்களை தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும். முடிந்தவரை அச்சடித்து வழங்கலாம். வழக்கு தொடர்பான மருத்துவ ஆவணங்கள் உட்பட டாக்டர்கள் வழங்கும் அனைத்து ஆவணங்களுக்கும் இது பொருந்தும்.
டவுட் தனபாலு: டாக்டரான முதல் நாளில் இருந்து, கிறுக்கியே எழுதி பழகுனவங்க கிட்ட, திடீர்னு முத்து, முத்தா எழுத சொன்னால் எப்படி... அவங்களுக்கு ரெண்டு வரி, நாலு வரி நோட்டுக்களை கொடுத்து, 'ஹேண்ட் ரைட்டிங்' பயிற்சி அளித்தால் தான் இது நடக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலர் மதியழகன்: தி.மு.க.,வினரை வலுக்கட்டாயமாக மற்ற கட்சிகளுக்கு துாக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பர்கூரில் கடத்தப்பட்ட ஒரு ஒன்றிய கவுன்சிலர், அ.தி.மு.க.,வில் சேர்ந்த, ஐந்து நாட்களில் திரும்பி விட்டார்; மற்றவர்களும் விரைவில் திரும்புவர்.
டவுட் தனபாலு: நீங்க எல்லாரையும் அணுசரிச்சி, சரியா வச்சிருந்தா அவங்க ஏன் ஆளுங்கட்சியை விட்டுட்டு, மாற்று கட்சியை நோக்கி போக போறாங்க... போனவங்க திரும்பலைனா, உங்க நிலைமை சிக்கலாகிடும்னு தலைமை நெருக்கியதால், கெஞ்சி, கூத்தாடி அவங்களை திரும்ப அழைச்சிட்டு வர்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!