PUBLISHED ON : ஜன 31, 2024 12:00 AM

நீலகிரி தொகுதி தி.மு.க. - எம்.பி., ராஜா: தி.மு.க., மாணவர் அணியில் இருப்பதே ஒரு பெருமிதம் தான். நம் கட்சியில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் என்றால், அது ஜில்லா கலெக்டருக்கு சமம். துணை அமைப்பாளர், துணை கலெக்டருக்கு சமம். அதற்கான தகுதியை மட்டும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: சபாஷ்... இப்படி கட்சிகாரர்களை உசுப்பேத்தி விடுற இவரை போன்றவர்களால் தான், 'என் துாக்கத்தை கெடுக்கற மாதிரி கட்சிக்காரர்களின் செயல்பாடுகள் இருக்கு'ன்னு முதல்வர் ஸ்டாலின் புலம்புற அளவுக்கு, தி.மு.க.,வினர் பல நேரங்களில், 'சிறப்பான சம்பவங்களை' செய்து விடுகின்றனர் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வு, பிப்., 1ல் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால், 180 மி.லி., அளவு சாதாரண, நடுத்தர ரக மதுபான விலை, 10 ரூபாய், அதே அளவு உடைய உயர்தர மதுபான விலை, 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி., பீர்வகை, 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
டவுட் தனபாலு: நிதி நெருக்கடியை சமாளிக்கணும்னா எந்த கட்டணத்தையாவது உயர்த்தி தான் ஆகணும்கிறது தமிழகத்தில் கட்டாயம் ஆகிடுச்சி... வழக்கம் போல பால், பஸ், மின்சார கட்டணத்துல கைய வச்சா, தேர்தலில் அது எதிரொலிக்கும்னு, 'அப்பாவி' குடிமகன்களின் தலையில் அரசு கை வைப்பது 'டவுட்'டே இல்லாமல் தெரியுது!
தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தமிழகத்துக்கு ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அவருக்கு வேண்டப்பட்ட தொழில் முதலீட்டாளர்களை, முதல்வர் ஸ்டாலின் நடத்தும் தொழில் முதலீட்டாளர் மாநாட்டுக்கு சென்று,தமிழகத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தலாம்.
டவுட் தனபாலு: உண்மை தான்... ஆனால், பழனிசாமி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக அரசியல்வாதிகளும் தங்களுக்கு வேண்டியவர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தி, அவர்களும் அப்படியே செய்தால், மூச்சுத்திணறும் அளவுக்கு முதலீடுகள் குவிஞ்சிடும் என்பதில் 'டவுட்'டே இல்லை!