PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி:
தி.மு.க., முதன்முதலில் ஆட்சிக்கு வர உழைத்த பெரும்பாலான
தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை. அத்தகைய ஆளுமைகள்
இல்லாததாலேயே சமூக நீதி கிடைக்க தாமதமாகிறது. வன்னியருக்கு
மட்டும் இடஒதுக்கீடு வழங்கினால், பிற சமூகத்தினர் ஓட்டு போட
மாட்டார்கள், எதிர்ப்பர் என முதல்வர் கருதினால், முறையாக ஜாதிவாரி
கணக்கெடுப்பு நடத்த வேண்டியது தானே.
காட்டுமன்னார்கோவில்தொகுதி வி.சி., கட்சி எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன் பேட்டி: வேங்கைவயல் பிரச்னையில் வி.சி., எந்த விதமான அரசியலும் செய்ய விரும்பவில்லை. மாறாக, நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் எங்களுடைய கோரிக்கை. தமிழக முதல்வர், வேங்கைவயல் வழக்கில் தனி கவனம் செலுத்தி, உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது எல்லாம், இந்த ஆட்சி முடியும் வரைக்கும் சாத்தியமில்லை!
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்: கல்வியின் மீது தனி கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதன் காரணமாக, இந்தியாவில் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் 32 தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.
அவை, கண்டிப்பாக தனியார் பல்கலைகளாக தான் இருக்கும்... பல இடங்கள்ல துணைவேந்தர்கள் இல்லாம தள்ளாடும் தமிழக அரசின் பல்கலைகளாக இருக்காது!
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு: தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி பெயரால் நுாற்றாண்டு விழா நவீன நுாலகத்தை மதுரையில் அமைத்திருக்கிறார். அடுத்து கோவையிலும், திருச்சியிலும் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகங்கள் அமையவிருக்கின்றன. புத்தக வாசிப்பை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக, நம் முதல்வர் தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளின் வெளிப்பாடு தான் இவை.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்க திறக்கிறாரா அல்லது அவரது தந்தை புகழ் பரப்ப திறக்கிறாரா என்பது, அவருக்கு தான் வெளிச்சம்!