PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM

மா.கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்: டில்லி சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, ஆறு தொகுதிகளில் போட்டி யிடுகிறோம். 'பா.ஜ.,வை தோற்கடிப்போம் - டில்லியை காப்போம்' என்பது எங்களின் தேர்தல் முழக்கம். மற்ற தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்வோம்.
டவுட் தனபாலு: மொத்தம் 70 தொகுதிகள் இருக்கிற டில்லியில, எண்ணி ஆறு தொகுதியில தான் உங்க கட்சிக்கு செல்வாக்கு இருக்குதா என்ற, 'டவுட்' வருதே... பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்றது இருக்கட்டும்... உங்களுடன், 'இண்டியா' கூட்டணியில இருக்கிற ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் அங்க தனித்தனியா போட்டியிடுதே... அதுல யாருக்கு உங்க ஆதரவு என்ற, 'டவுட்'டும் சேர்ந்து எழுதே!
எல் அண்டு டி., நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன்: உங்களை ஞாயிறு அன்றும் பணி செய்ய வைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். காரணம், நான் ஞாயிறு அன்றும் பணியாற்றுகிறேன். உலகில் நாம் முதல் நிலையில் இருக்க வேண்டுமானால், வாரத்தில் 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும். வீட்டில் இருந்து என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் தான் உங்கள் மனைவியின் முகத்தையே பார்த்து கொண்டிருப்பீர்கள்.
டவுட் தனபாலு: ஞாயிற்றுக் கிழமைகள்லயும் உலகம் இயங்கவே செய்யுது... எத்தனையோ பேர் அன்றும் பணி செய்றாங்க என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை... அதே நேரம், எல்லா ஞாயிற்றுக் கிழமையும் உங்க ஊழியர்கள் ஆபீசுக்கு வந்துட்டே இருந்தால், அவங்க முகத்தை அவங்க மனைவியும், குழந்தைகளுமே மறந்துட மாட்டாங்களா என்ற, 'டவுட்'டும் கூடவே வருதே!
பத்திரிகை செய்தி: 'இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இயலவில்லை' என, ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் இருக்கும் ரேஷன் கடைகளில் எழுதி வைத்துள்ளனர். இதை பார்க்கும் மக்கள், எரிச்சலோடு கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.
டவுட் தனபாலு: பொங்கல் முடிஞ்சதும், அமைச்சர்கள் பட்டாளமே அங்க குவியப் போகுது... 'போதும் போதும்'ங்கற அளவுக்கு வாக்காளர்களை பரிசு மழையில நனைக்க இருக்காங்க... இதுல, 1 கிலோ அரிசி, சர்க்கரை, ஒரு கரும்புக்கு போய் வீணா தகராறுல இறங்கணுமா என்ற, 'டவுட்' வருதே!

