PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற ஈரோடு கிழக்கு தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது தான் உண்மையான தோழமை. 2026 சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை தி.மு.க., கொடுக்கும்; அதற்கான நம்பிக்கை எங்களிடம் உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறோம் என்றால், இன்னொரு உதவியையோ, உரிமையையோ காங்கிரசுக்கு தி.மு.க., கொடுக்கும்; அதை வெளியில் சொல்ல முடியாது.
டவுட் தனபாலு: அது சரி... ஒரு வருஷம் மட்டுமே எஞ்சியிருக்கிற எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிட, உங்க கட்சியில் யாரும் முன்வரலை... இதை வெளியில சொன்னா நல்லாயிருக்காதுன்னு, தி.மு.க.,வுக்கு விட்டு கொடுத்துட்டு, கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத மாதிரி பேசுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பண பலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, மக்களை சுதந்திரமாக ஓட்டளிக்க விட மாட்டார்கள்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்காது. எனவே, இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிக்கிறது.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற எந்த காரணங்களையும் மறுப்பதற்கில்லை... ஆனாலும், பிரதான எதிர்க்கட்சியான நீங்க களத்தில் இருந்து, இதை எல்லாம் தட்டி கேட்டால் தானே ஆளுங்கட்சி கொஞ்சமாவது பயப்படும்... நீங்க ஒதுங்கிட்டதால, உங்க கட்சிக்கு விழ வேண்டிய ஓட்டுகள் எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு போய், சீமான் பெரிய சக்தியா வளர்ந்துடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மக்களுக்கு, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொடுத்துள்ளார். அதேபோல், 'டபுள் இன்ஜின்' அரசு தமிழகத்திலும் இருந்தால், எவ்வளவு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முடியும்.
டவுட் தனபாலு: 'பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டு, ஆட்சியில் அமர வைத்தால் தான் வளர்ச்சி திட்டங்கள் தருவோம்... இல்லை என்றால், உங்களை கண்டுக்கவே மாட்டோம்... எந்த திட்டமும் வராது'ன்னு தமிழக மக்களை எச்சரிக்கை பண்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

