PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: நம்பிக்கை என்பதற்கான இலக்கணமே தெரியாதவர், செந்தில் பாலாஜி. அ.தி.மு.க.,வில் இருந்தபோது தி.மு.க.,வைப் பற்றி எவ்வளவு அவதுாறாக பேசினார். 'கொள்ளைக் கூடாரம் கருணாநிதி குடும்பம்' என, செந்தில் பாலாஜி சொன்னாரா, இல்லையா?
டவுட் தனபாலு: பன்னீர்செல்வம் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தபடியே, 'சசிகலா முதல்வர் பதவிக்கு வரணும்'னு பிரச்னையை துவக்கி வச்சு, இன்று பன்னீரையும், சசிகலாவையும் யார்னு கேட்குற இடத்துக்கு போயிட்டீங்களே... நம்பிக்கை பற்றி நீங்க பேசலாமா என்ற, 'டவுட்' வருதே!
உத்தவ் சிவசேனா பிரிவின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் ராவத்: நம் நாட்டுக்குள், சட்ட விரோதமாக குடியேறிய ஒவ்வொரு வெளிநாட்டினரும் நாடு கடத்தப்பட வேண்டும். இது, தேச பாதுகாப்பு தொடர்பானது. இந்த விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அமெரிக்க அதிபரா பொறுப்பேற்றுள்ள டிரம்ப், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தீவிரமா இருக்காரு... அவ்வளவு பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே, சட்டவிரோத குடியேறிகளால குடைச்சல் என்றால், நம்மை போன்ற வளரும் நாடுகளுக்கு எவ்வளவு பாதிப்புகள் வரும்... இனியும் நாம அசால்டா இருந்தா, ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிய கதையாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே மகளிர் உரிமைத் தொகையை, 2 லட்சத்து, 38,438 பேருக்கு வழங்கியுள்ளோம். வங்கி கணக்கில் பணம் வந்ததும், அனைத்து பெண்களும், 'எங்கள் அண்ணன் ஸ்டாலின் தாய்வீட்டு சீதனம்' என்றும்; கல்லுாரி மாணவியர் மாதம், 1,000 வீதம் ஆண்டுக்கு 12,000 ரூபாய் பெற்று, 'எங்கள் அப்பாவாக இருந்து ஸ்டாலின் தருகிறார்' என்றும் பெருமை கொள்கின்றனர்.
டவுட் தனபாலு: மகளிருக்கும், மாணவியருக்கும் 1,000 ரூபாயை, ஏதோ தி.மு.க., அறக்கட்டளையில் இருந்து கொடுக்குற மாதிரி பேசுறீங்களே... மக்கள் தரும் வரிப்பணத்திலும், 'டாஸ்மாக்'கில் குடித்துக் குடித்து குடல் வெந்துபோன ஆண்கள் தரும் பணத்தையும் எடுத்துதான், அவங்க வீட்டு பெண்களுக்கு தர்றீங்க என்பதுதான், 'டவுட்' இல்லாத உண்மை!

