PUBLISHED ON : பிப் 02, 2025 12:00 AM

துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி.,கனிமொழி: தமிழகத்தில் பெண்கள் உயர் கல்வி படிக்கும் நிலையை எட்டுவதற்கு, முந்தைய தலைமுறையினர் பல தியாகங்களையும், போராட்டங்களையும் செய்துள்ளனர். பெண்களின் கல்வி கனவு பயணத்தை யாருக்காகவும், எப்போதும் விட்டுவிடக் கூடாது என்பதை, ஈ.வெ.ரா., தொடர்ந்து வலியுறுத்தினார். அவரை தாண்டி ஒரு பெண்ணியவாதியை இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை.
டவுட் தனபாலு: அது சரி... குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு, மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கம், உள்ளாட்சிகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு எல்லாம் கொண்டு வந்த உங்க தந்தை கருணாநிதி, பெண்ணியவாதி இல்லன்னு சொல்ல வர்றீங்களா என்ற, 'டவுட்' வருதே!
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரத்தில் நியாயமான பங்கு வழங்கும் வரை, அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாது. எந்த துறையாக இருந்தாலும், அவர்களுக்கு அதிகாரத்தில் உரிய பங்களிப்பு தரப்பட வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது நுாற்றுக்கு நுாறு உண்மை... ஆனா, உங்க கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் தலித்தான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நீங்க முழு அதிகாரத்தை தந்திருக்கீங்களா...? தலைவர் பதவியில் அவர் இருந்தாலும், அதிகாரம் முழுக்க உங்களிடம் தான் இருக்கு என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை.
பத்திரிகை செய்தி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தாலும், தொகுதியில் தி.மு.க.,வுக்கு இணையாக உள்ள அ.தி.மு.க.,வினர் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என, பழனிசாமி நேரிடையாக வழிகாட்டவில்லை. சரியான வழிகாட்டுதல் இல்லை என்றால், அ.தி.மு.க.,வின் 95 சதவீத ஓட்டுகள் இம்முறை தி.மு.க.,வுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
டவுட் தனபாலு: தி.மு.க.,வுக்கு மாற்றாக, நாம் தமிழர் கட்சி தான் அங்கு போட்டியிடுது... 'அந்த கட்சிக்கு போடுவதை விட,பங்காளியான தி.மு.க.,வுக்கே அ.தி.மு.க.,வினர் ஓட்டுகள் போகட்டும்'னு பழனிசாமி அமைதி காக்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!