PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்: காவல் துறை உதவியாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக பெண் ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் அளித்திருக்கும் புகார் குறித்து, தீவிரமாக விசாரித்தால் உண்மை வெளிவரும். அவர் பரபரப்பு அரசியலுக்காக, இப்படியெல்லாம் புகார் கொடுத்துஇருப்பதாக நினைக்கிறேன்.
டவுட் தனபாலு: பெண் போலீஸ் அதிகாரி ஏன் பரபரப்பு அரசியல் செய்யணும்...? உங்களை மாதிரி தேர்தல்ல நின்று ஜெயித்து, அமைச்சராகணும்னு அவங்களுக்கு எந்த கட்டாயமும் இல்லையே... உங்க ஆட்சியின் முறைகேடுகளை மூடி மறைக்க, பெண் அதிகாரி மீது பழி போடுவதா என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்ஜெயகுமார்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு சவால் விடுவதை, சட்ட அமைச்சர் ரகுபதி ஒரு தொழிலாகக் கொண்டுள்ளார். அ.தி.மு.க.,வால் வாழ்வும் வளமும் பெற்று, தன் சுகபோகத்திற்காக, வாழ்வளித்த கட்சியை மறந்து, தி.மு.க.,வில் இணைந்தவர்களுக்கு, அ.தி.மு.க.,வை குறைகூற எந்த அருகதையும் இல்லை.
டவுட் தனபாலு: சரி விடுங்க... இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருப்பது, எல்லா இடத்திலும் இயற்கைதானே... ரகுபதி அப்படி எல்லாம் சவால் விடுவதால்தான், இப்பவும் வாழ்வும், வளமும் பெற்று, சுகபோகமாகவும் வாழ்ந்துட்டு இருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தி.மு.க.,வை வெல்லக் கூடிய ஆற்றல், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டுமே இருக்கிறது. அதன் அடிப்படை யில், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவான ஒரு அழைப்பை விடுத்துக் கொண்டு இருக்கிறேன். அவர்கள் தனியாக நின்று ஓட்டுகளை வீணடிக்காமல், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது என் விருப்பம் மட்டுமே. தங்களுக்கு முதல்வர் பதவி பெரிதா, தி.மு.க., வீழ்ச்சி பெரிதா என, பழனிசாமி மற்றும் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்வது வாஸ்தவம்தான்... தி.மு.க.,வை வீழ்த்தணும் என்றால், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால்தான் சாத்தியமாகும்... ஆளாளுக்கு முதல்வர் கனவுடன் தனித்து நின்றால், முதல்வர் இல்ல சாதாரண எம்.எல்.ஏ., ஆவதுகூட, 'டவுட்'தான்!