PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: டில்லி தேர்தலில் இருந்து, 'இண்டியா' கூட்டணி படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். மதவாதத்தை வீழ்த்த, தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் உறுதியாக இருப்பது போல் இருந்திருந்தால், டில்லியில் பா.ஜ.,வை வீழ்த்தியிருக்கலாம். இதை இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் உணர வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க வாதத்துக்கே வருவோம்... அடுத்த வருஷம், கேரளாவுல சட்டசபை தேர்தல் நடக்கப் போகுது... தேசிய அளவில், 'இண்டியா' கூட்டணியில் இருக்கும் நீங்களும், காங்கிரசும், அங்கயும் கைகோர்த்து களமிறங்குவீங்களா என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் விடை கிடைக்குமா?
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: வேங்கைவயல் வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை இறுதியானது அல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை அமைந்திருக்கிறது என்ற வலி, அந்த கிராமத்து மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது, தமிழகம் முழுதும் உள்ள பட்டியலின மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
டவுட் தனபாலு: வேங்கைவயல் சம்பவத்துல, தி.மு.க., அரசு மீது நீங்க கடும் அதிருப்தியில் இருப்பது நல்லாவே தெரியுது... அந்த வலிக்கும், வேதனைக்கும் கூட்டணி மாற்றமே மாமருந்து என்ற முடிவுக்கு வந்துடுவீங்களோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, மாத ஊதியம், மின்கட்டணம் போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல், கடும் நிதி நெருக்கடியில் கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன. அவற்றை முதல்வர் மருந்தகங்களாக திறக்க சொல்லி நிர்பந்திப்பது, அந்த நிறுவனங்களை முற்றிலும் முடக்கும் செயலாகும்.
டவுட் தனபாலு: அம்மா மருந்தகங்களை நாலு வருஷமா பெயர் மாற்றாம இருந்ததே பெரிய விஷயம்... அடுத்த வருஷம் தேர்தல் வர்றதால, 'அம்மா' பெயர் எங்கயும் தென்படக் கூடாதுன்னு ஆளுங்கட்சியினர் நினைச்சுட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

