PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: இன்றைய, 'டிஜிட்டல்' யுகத்தில், தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க, அரசியல் கட்சிகளுக்கு வியூக வகுப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். கட்சியினருடன் உரையாடவும், சமூக வலைதளங்களில் செயல்படவும் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், பிரஷாந்த் கிஷோர் போன்றவர்களை கட்சிகள் பயன்படுத்துகின்றன.
டவுட் தனபாலு: உங்களுக்கும் கூடத்தான், 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி'ன்னு ஒருத்தர் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தார்... ஆனா, அது உங்களுக்கு எந்த பலனையும் தரலையே... கருணாநிதியும், ஜெ.,யும் எந்த வியூக வகுப்பாளர்களை வச்சு, தேர்தல்கள்ல ஜெயிச்சாங்க... தங்களை நம்பாதவங்க தான், வியூக வகுப்பாளர்களை நம்புவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சரான, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே: டில்லியில் பா.ஜ., பெற்றது சாதனை வெற்றி. ஹரியானா, மஹாராஷ்டிராவை தொடர்ந்து தலைநகர் டில்லியிலும், பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. டில்லி மக்கள் ஊழலுக்கு எதிராகவும், வளர்ச்சிக்கு ஆதரவாகவும் ஓட்டளித்துள்ளனர்.
டவுட் தனபாலு: நம்ம மக்கள் என்றைக்குமே ஊழலுக்கு ஆதரவாக இருந்ததே இல்லை... டில்லியில், 2015, 2020 சட்டசபை தேர்தல்களில் ஜெயித்த ஆம் ஆத்மி கட்சி, வழக்கமான அரசியல்வாதிகள் பாணியில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான், இன்று ஆட்சியை பறிகொடுத்துட்டு அம்போன்னு நிற்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: த.வெ.க., தலைவர் விஜயை, வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். மக்களின் அன்பை பெற்றவர்கள்; மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக, வியூக வகுப்பாளர்களால் என்ன செய்துவிட முடியும்? அந்த வியூகங்கள் என்ன பலனை கொடுத்து விடும் என தெரியவில்லை. தி.மு.க.,வை பொறுத்தவரை, 2026ல் வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
டவுட் தனபாலு: இதே பிரஷாந்த் கிஷோர் தானே, 2021ல் உங்க கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளரா இருந்து, 'ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போறாரு' என்ற வாசகத்தை வடிவமைத்து உங்க கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்... இப்ப, அவரை விஜய் தரப்பு வளைச்சுட்ட எரிச்சல்ல, 'சீச்சீ... இந்த பழம் புளிக்கும்' என்ற கதையா பேசுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

