/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
வாழ்க்கை வாழ்வதற்கே... 'எதிர்' நீச்சல் அடித்து சாதிக்கும் சிறுவன்
/
வாழ்க்கை வாழ்வதற்கே... 'எதிர்' நீச்சல் அடித்து சாதிக்கும் சிறுவன்
வாழ்க்கை வாழ்வதற்கே... 'எதிர்' நீச்சல் அடித்து சாதிக்கும் சிறுவன்
வாழ்க்கை வாழ்வதற்கே... 'எதிர்' நீச்சல் அடித்து சாதிக்கும் சிறுவன்
UPDATED : மார் 24, 2024 01:24 PM
ADDED : மார் 24, 2024 05:25 AM

''உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு...''இப்படி அந்த மருத்துவர் சொன்னதும், மகிழ்ச்சியில் திளைத்தது அந்த தம்பதி. 'அந்த மகிழ்ச்சி, 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை' என்பது தான், துரதிருஷ்டம்.
மறுநாள் காலை தான் தெரிந்தது, அந்த குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்னை உள்ளது; இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையில் தான் இருப்பான், சிறுநீர், மலம் கழிப்பது கூட அவனுக்கு தெரியாது' என்கிற விவரம்.
'எப்படி வளர்த்தெடுக்க போகிறோமோ?' என்ற ஏக்க தவிப்புடன், குழந்தையை வளர்த்தெடுக்க துவங்கிய பெற்றோருக்கு, அப்போது தெரியவில்லை, அவன் நீச்சல் வீரனாக உருவெடுப்பான் என்று.
கதையல்ல... நிஜம்!
அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் தங்கம் கார்டனில் வசிக்கும் ராஜா, மில் தொழிலாளி; அவரது மனைவி சுசிகலா; பனியன் தொழிலாளி. அவர்களது, 12 வயது மகன் சபரி ஆனந்த். முதுகுதண்டுவட பிரச்னையுடன் பிறந்த குழந்தை இவர் தான். அவிநாசிலிங்கம்பாளையம், அரசு நடுநிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
''குழந்தையில் இருந்தே, என் மகனுக்கு மருத்துவம் பார்த்து வருகிறோம். அவனுக்கு, 2,3 அறுவை சிகிச்சையும் செய்தாகி விட்டது. சென்னை, அம்பாசமுத்திரத்தில், நடிகர் நெப்போலியன் நடத்தி வரும் ஜீவன் பவுண்டேஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அங்குள்ள மருத்துவர் டேனியல், என் மகனின் கால்களை வலுப்படுத்த, நீச்சல் குளத்தில் நிற்க வைத்து பயிற்சி வழங்கினார். அந்த பயிற்சி, என் மகனுக்கு நீச்சல் மீதான ஆர்வத்தை தானாகவே ஏற்படுத்த, மருத்துவர் ஊக்குவித்தார். பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தார்; என் மகனும் நீச்சலில் திறமை பெற்றான்.
பின், சிகிச்சை முடிந்து, திருப்பூர் வந்ததும், பூலுவபட்டியில் உள்ள நீச்சல் பயிற்சி அரங்கிற்கு அழைத்து சென்று, என் பிள்ளையின் திறமையை சொன்னதும், பயிற்சியாளர்கள் நல்ல முறையில் பயிற்றுவித்தனர்.
சமீபத்தில், தேனியில் நடந்த மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் ஜீவன் பவுண்டேஷன் சார்பில் என் மகன் பங்கேற்று, சப்- ஜூனியர் பிரிவில், 50 மீ., 'பிரி ஸ்டைல்'; 50 மீ., மற்றும் 100 மீ., 'பேக் ஸ்ட்ரோக்' பிரிவில், 3 தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளான்.
இவ்வாறு, தன் குழந்தையின் மாற்றுத்திறமையை பெருமையுடன் சொல்லி முடித்தார், ராஜா.
அதிகாரிகள் பாராட்டு
இதனையறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், சபரி ஆனந்த் வீட்டுக்கே சென்று மனதார வாழ்த்தினர்.
''இருப்பினும், என் மகனுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது; பிசியோதெரபி செய்ய வேண்டியிருக்கிறது; இதற்கெல்லாம் என்னிடம் பணம் இல்லை. டாக்டர்கள் கற்றுக் கொடுத்த உடற்பயிற்சியை வீட்டில் இருந்த படியே செய்து வருகிறோம்,'' என்றார் ராஜா.
நோயுடன் போராடும் சிறுவனின் அசாத்திய திறமை, மனம் தளராமல் அவனை வளர்த்தெடுக்கும் பெற்றோரை பாராட்ட, உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், 94893 83540 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

