/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
விபத்தில் துண்டான ராணுவ வீரரின் கை; நள்ளிரவில் விமானத்தில் நடந்த மீட்பு பணி
/
விபத்தில் துண்டான ராணுவ வீரரின் கை; நள்ளிரவில் விமானத்தில் நடந்த மீட்பு பணி
விபத்தில் துண்டான ராணுவ வீரரின் கை; நள்ளிரவில் விமானத்தில் நடந்த மீட்பு பணி
விபத்தில் துண்டான ராணுவ வீரரின் கை; நள்ளிரவில் விமானத்தில் நடந்த மீட்பு பணி
UPDATED : ஏப் 13, 2024 03:00 PM
ADDED : ஏப் 13, 2024 12:50 AM

புதுடில்லி: லடாக்கில், பணியின் போது ராணுவ வீரரின் கை துண்டானதை அடுத்து, நள்ளிரவில் விமானத்தை இயக்கி, அவரை டில்லிக்கு அழைத்து வந்து உயிரை காப்பாற்றிய நம் விமானப்படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
லடாக்கில் உள்ள நம் ராணுவ தளத்தில், நம் வீரர் ஒருவர், கடந்த 10ம் தேதி இரவு இயந்திரத்தை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
அறுவை சிகிச்சை
ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்கப்பட்டு, கை இணைக்கப்பட வேண்டும் என்பதால், அந்த ராணுவ வீரர் உடனடியாக, லே விமான தளத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
நம் விமானப் படையின் சூப்பர் ஹெர்குலஸ் விமானமான, 'சி - 130 ஜே' விமானத்தின் உதவி கோரப்பட்டது.
இந்த விமானம் தரையிறங்க எந்த வெளிச்சமும் தேவையில்லை. நள்ளிரவில் கூட எந்த விதமான ஓடுபாதையிலும் இந்த விமானத்தை தரையிறக்கலாம்.
இதன்படி, லே விமான தளத்துக்கு நள்ளிரவில் வந்த, சி - 130 ஜே விமானத்தின் உதவியுடன், கை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரரை, தலைநகர் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு துண்டிக்கப்பட்ட கை தைக்கப்பட்டது.
பாராட்டு
தற்போது அந்த ராணுவ வீரர் நலமுடன் இருப்பதாக நம் விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் விமானப்படை வெளியிட்டுள்ளது.
இந்த ஆப்பரேஷனுக்கு மொத்தம் நான்கு மணி நேரம் மட்டுமே ஆனது. நள்ளிரவில் விமானத்தை இயக்கி ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த 2023 ஏப்ரலில், வட ஆப்ரிக்க நாடான சூடானில், இரு ராணுவப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, அங்கு தங்கியிருந்த இந்தியர்களை, அந்நாட்டுக்கே தெரியாமல், நள்ளிரவில் சேதமடைந்த ஓடுபாதையில் சி - 130 ஜே விமானத்தை தரையிறக்கி, 100க்கும் மேற்பட்டோரை நம் விமானப் படையினர் அழைத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

