/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கருணாநிதி விழாவில் நாற்காலிகள் இலவசம்; கலையாத கூட்டத்தை காட்ட தி.மு.க., புதுவிதம்
/
கருணாநிதி விழாவில் நாற்காலிகள் இலவசம்; கலையாத கூட்டத்தை காட்ட தி.மு.க., புதுவிதம்
கருணாநிதி விழாவில் நாற்காலிகள் இலவசம்; கலையாத கூட்டத்தை காட்ட தி.மு.க., புதுவிதம்
கருணாநிதி விழாவில் நாற்காலிகள் இலவசம்; கலையாத கூட்டத்தை காட்ட தி.மு.க., புதுவிதம்
UPDATED : ஜூன் 28, 2024 12:46 PM
ADDED : ஜூன் 28, 2024 07:52 AM

சென்னை : சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம், வேளச்சேரி விஜயநகர் முதல் தெருவில் நேற்று முன்தினம் நடந்தது. அதற்கான ஏற்பாடுகளை, தி.மு.க.,வை சேர்ந்த 176வது வார்டு கவுன்சிலர் ஆனந்தம் செய்திருந்தார். கருத்தரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கூட்டம் சேராமல் இருந்தால், வெறும் நாற்காலிகளை பார்த்து தான் பேச வேண்டிய நிலை ஏற்படும். இதை தவிர்க்கவும், யாரும் எழுந்து செல்லாமல் இருக்கவும், கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஆனந்தம் புதுமையான திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.
கூட்டத்துக்கு வந்தவர்கள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேர்கள் அவர்களுக்கே சொந்தம் என அறிவிப்பு வெளியிட்டு முன் கூட்டியே டோக்கனும் வழங்கியுள்ளார். இந்த தகவல் தெரிந்ததும், கட்சியினரும் அக்கம் பக்கத்தினரும் திரண்டு வந்து, சேர்களை தேடிப் பிடித்து உட்கார்ந்து கொண்டனர். கொஞ்ச நேரத்தில், அரங்கம் 'ஹவுஸ்புல்' ஆனது.
தி.மு.க., கவுன்சிலர் ஆனந்தம் கூறியதாவது: கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு வழக்கமாக பிரியாணி பொட்டலத்துடன், குவாட்டர் சரக்குக்கான பணமாக ரூபாய் ஐநூறு வரை கொடுக்கப்படும். கூட்டத்துக்கு அழைத்து வரப்படுவோர், குவாட்டருக்கான பணத்தைப் பெற்று, குடித்து விட்டு செல்வர். கூட்டத்துக்கு வருபவர்களுக்கு, அது எந்த வகையிலும் பிரயோஜனமில்லாமல் போய் விடும்.
அதைத் தடுக்க வேண்டும். அதே நேரம், அதன் வாயிலாக கூட்டத்துக்கு வருபவர்கள் மத்தியில் எனக்கான விளம்பரமும் வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். அப்போதுதான் இப்படி பிளாஸ்டிக் நாற்காலி வாங்கிக் கொடுக்கும் யோசனை தோன்றியது. வெளியில் ஒரு பிளாஸ்டிக் சேரின் விலை 800 ரூபாய் வரை இருந்தது. மொத்தமாக வாங்கினால், ஒரு சேரை 400 ரூபாய்க்கே தருவதாகக் கூறினர்.
அதன் அடிப்படையில், 2000 பிளாஸ்டிக் சேர்களை எட்டு லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். பலர் குடும்பத்தோடு வந்து கூட்டம் முடியும் வரை அமர்ந்திருந்து, சேர்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இனி வீட்டு உபயோகப் பொருளாக அந்த பிளாஸ்டிக் சேர்கள் பயன்படும். இது என்னுடைய வருங்கால அரசியலுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.