/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
1.8 ஆண்டு கால ஆயுளை குறைத்தது கொரோனா தொற்று
/
1.8 ஆண்டு கால ஆயுளை குறைத்தது கொரோனா தொற்று
ADDED : மே 25, 2024 11:47 PM

புதுடில்லி : கொரோனா தொற்றுப் பரவல், மனிதர்களின் ஆயுளை, 1.8 ஆண்டு அளவுக்கு குறைத்துள்ளது என, உலக சுகாதார அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சராசரி ஆயுள்
கொரோனா தொற்றுப் பரவலால், உலகெங்கும், 1.3 கோடிக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த, 2020ல் உலகளவில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களில் முதலிடத்திலும், 2021ல், இரண்டாவது இடத்திலும் கொரோனா இருந்தது.
கடந்த, 2019 முதல் 2-021 காலகட்டத்தில், மனிதர்களின் உலகளாவிய சராசரி ஆயுள் 1.8 ஆண்டுகள் குறைந்து, 71.4 ஆண்டாக இருந்தது. அதே நேரத்தில், ஆரோக்கியமான வாழ்நாள், 1.5 ஆண்டுகள் குறைந்து, 61.9 ஆண்டாக இருந்தது.
அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சராசரி ஆயுள், 3 ஆண்டு வரை குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“முந்தைய, 10 ஆண்டு களில் கடுமையான முயற்சிகளால் மேம்படுத்தப்பட்ட மனிதர்களின் ஆயுள் காலத்தை, இரண்டே ஆண்டுகளில் இழக்க நேரிட்டுள்ளது,” என, உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரஸ் அதனோம் கெப்ரியாசிஸ் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையில், உடல் பருமன் தொடர்பாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2022ம் ஆண்டில், 5 வயதுக்கு மேற்பட்டோரில், 100 கோடி பேர், உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 50 கோடி பேர் மிகக் குறைந்த எடையுடன் உள்ளனர்.
போதிய வளர்ச்சி
உலகெங்கும், 5 வயதுக்குட்பட்ட 14.8 கோடி பேர் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், 4.5 கோடி குழந்தைகள் போதிய வளர்ச்சி இல்லாமல் உள்ளன. 3.7 கோடி குழந்தைகள் உடல் பருமனாக உள்ளன என, அதில் கூறப்பட்டுள்ளது.