/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
''ஆளை பார்த்து எடை போடாதே'' : சிறுவனின் விடாமுயற்சி
/
''ஆளை பார்த்து எடை போடாதே'' : சிறுவனின் விடாமுயற்சி
''ஆளை பார்த்து எடை போடாதே'' : சிறுவனின் விடாமுயற்சி
''ஆளை பார்த்து எடை போடாதே'' : சிறுவனின் விடாமுயற்சி
ADDED : பிப் 27, 2025 12:55 PM

'ஆளை பார்த்து எடை போடாதே' என்கிற பழமொழிக்கு ஏற்ப ரொம்ப சின்னஞ்சிறு மாணவன் மல்லர் கம்பம், சிலம்பத்தில் பெரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர் செந்தமிழ்செல்வன், பார்ப்பதற்கு 'ஆள் இரண்டு அடி தான்' ஆனால் பல ஆயிரம் கி.மீ., துாரம் தாண்டி அவரது சாதனைகள் பெருமை சேர்த்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பாப்பனம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். தந்தை குணா, தாய் தனலட்சுமி. இவருக்கு தம்பியும் உள்ளார். பிறக்கும்போது வளர்ச்சி குறைபாடுடன் பிறந்த காரணத்தால், பலரது கேலி, கிண்டலுக்கு ஆளாகினார். ஆரம்பத்தில் மனம் தளர்ந்துபோய், யாருடனும் பேசாமல் ஒதுங்கி போனார். காலப்போக்கில், அவரது மாமன் தனசேகர் ஆறுதலான வார்த்தைகளால், தனது பள்ளி படிப்பை துவக்கினார்.
தற்போது, பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நடைபெற்ற ஒரு விழாவில், சுரேந்தர் என்கிற இளைஞர், செந்தமிழ்செல்வனிடம் உள்ள தனித்திறமையை கண்டறிந்தார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த கம்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி சுரேந்தர், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மல்லர்கம்பம், சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம், செந்தமிழ்செல்வன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மல்லர் கம்பம், சிலம்பம் பயின்று வருகிறார்.
தற்போது வரை 50 சாதனை மேடைகள் ஏறி உள்ளார். மல்லர் கம்பம் போட்டியில் மாவட்ட அளவிலும், சிலம்பம் போட்டியில் மாநில அளவிலும் பங்கேற்றுள்ளார். ஜிம்னாஸ்டிக், கத்தி கேடயம் போன்ற பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது, உலக சாதனை நிகழ்த்துவதற்காக மல்லர் கம்பம் பிரிவில் தீவிர பயிற்சி பெற்று வருகிறார். ஒரு காலத்தில் மற்றவர்களின் கிண்டலுக்கு பயந்து ஒதுங்கி போன, செந்தமிழ் செல்வனின் விடாமுயற்சி, தற்போது ஊரே கொண்டாடும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சிறுவனை, தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரராக கொண்டு செல்ல உறுதி ஏற்றுள்ளதாக, சிலம்பம் பயிற்சியாளர் சுரேந்தர் தெரிவித்தார்.
மாணவன் செந்தமிழ் செல்வன் கூறுகையில், எத்தனை தடைகள், கேலி கிண்டல்கள் வந்தாலும், அதனை பொருட்படுத்த மாட்டேன். இதற்காக சாதனை முயற்சியை கைவிடமாட்டோன். என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளர் கனவை நிறைவேற்றிக் காட்டுவேன் என உறுதியுடன் தெரிவித்தார்.