/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மூட்டை துாக்குகிறார் முன்னாள் அமைச்சர் :சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
/
மூட்டை துாக்குகிறார் முன்னாள் அமைச்சர் :சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
மூட்டை துாக்குகிறார் முன்னாள் அமைச்சர் :சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
மூட்டை துாக்குகிறார் முன்னாள் அமைச்சர் :சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
UPDATED : ஏப் 27, 2024 12:46 AM
ADDED : ஏப் 26, 2024 10:02 PM

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் தொகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன். இவரது பூர்வீக தொழில் விவசாயம். இவருக்கு அம்பகரத்துார், நல்லம்பல் பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் காங்., சார்பில் திருநள்ளார் தொகுதியில் வெற்றி பெற்று காங்., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தோல்வியுற்றதால், அரசு அலுவலகங்கள், கோப்புகள் என பிசியாக இருந்த அமைச்சர், அதன்பிறகு விவசாய பணிகளில் மூழ்கி விட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அம்பகரத்துார் சின்ன கடை தெருவில் உள்ள கடைக்கு லுங்கி, பனியன் அணிந்து கொண்டு டிராக்டரில் வந்த முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், விவசாய கூலித் தொழிலாளியுடன் நெல் மூட்டைகளை கடைக்குள் இறக்கி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அந்த வீடியோவில், அங்கிருந்த ஒருவர், 'நீங்கள் ஏன் இந்த வேலை பார்க்கிறீர்கள்' என கேட்கிறார்.
அதற்கு, முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், 'இந்த வேலை செய்தால் தான் சாப்பாட்டுக்கு அரிசி கிடைக்கும்' என்றார். பின், எதிரில் நின்றிருந்த காய்கறி பயிரிடும் விவசாயியை கையை நீட்டிக் காண்பித்து, 'இவர் காய்கறி பறிக்கவில்லை என்றால், குழம்பு வைக்க முடியுமா' என நகைப்புடன் கூறி, அடுத்த மூட்டையை இறக்கினார்.

