/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கெத்து ரீல்ஸ் வெளியிட்ட ரவுடியை திருக்குறள் படிக்க வைத்த போலீஸ்
/
கெத்து ரீல்ஸ் வெளியிட்ட ரவுடியை திருக்குறள் படிக்க வைத்த போலீஸ்
கெத்து ரீல்ஸ் வெளியிட்ட ரவுடியை திருக்குறள் படிக்க வைத்த போலீஸ்
கெத்து ரீல்ஸ் வெளியிட்ட ரவுடியை திருக்குறள் படிக்க வைத்த போலீஸ்
ADDED : செப் 01, 2025 12:41 AM

துாத்துக்குடி; பிறந்தநாள் கொண்டாட்டத்தை, இன்ஸ்டாகிராமில் கெத்து காட்டி, 'ரீல்ஸ்' வெளியிட்ட ரவுடியை பிடித்த போலீசார், அவரை திருக்குறள் படிக்க வைத்து, அந்த வீடியோவையைும் வெளியிட்டனர்.
துாத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 26. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் அவரது பெயர் உள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி ராஜா, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
'துாத்துக்குடியில் யாரா வேணாலும் இரு... நம்ம லைனில் கரெக்டா இரு' என, அவர் பேசும் ரீல்சில், அஜித் படத்தில் இடம்பெற்ற, திரையரங்கம் சிதறட்டும் என்ற பாடல் பின்னணியில் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவில், விசாரணை நடத்திய முத்தையாபுரம் போலீசார் ரவுடி ராஜாவை நேற்று கைது செய்தனர். அவருடன் வீடியோவில் இருந்த அவரது இரு நண்பர்களை அழைத்த போலீசார் மூவரையும் திருக்குறள் படிக்க வைத்து அதை வீடியோவாக வெளியிட்டனர்.
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' என்ற திருக்குறளை அவர்கள் வாசித்து அதற்கான பொருளை படிக்க வைத்து போலீசார் வெளியிட்ட வீடியோ, தற்போது பரவி வருகிறது. இதையடுத்து, ராஜாவை சிறையில் அடைத்த போலீசார் அவரது நண்பர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.
இன்ஸ்டாகிராமல் கெத்து வீடியோ வெளியிட்டு சிக்கிய ரவுடியை, போலீசார், திருக்குறள் படிக்க வைத்த வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களை அச்சுறுத்தும் வகையிலும், அமைதிக்கு பங்கம் வகிக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.