/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மாயமான இன்ஜினியர் நொய்டாவில் மீட்பு; மனைவி 'டார்ச்சரால்' ஓடியது அம்பலம்
/
மாயமான இன்ஜினியர் நொய்டாவில் மீட்பு; மனைவி 'டார்ச்சரால்' ஓடியது அம்பலம்
மாயமான இன்ஜினியர் நொய்டாவில் மீட்பு; மனைவி 'டார்ச்சரால்' ஓடியது அம்பலம்
மாயமான இன்ஜினியர் நொய்டாவில் மீட்பு; மனைவி 'டார்ச்சரால்' ஓடியது அம்பலம்
ADDED : ஆக 16, 2024 10:58 PM

பெங்களூரு : திடீரென காணாமல் போன மென்பொறியாளர் ஒருவர், உ.பி., மாநிலம் நொய்டாவில் கண்டுபிடிக்கப்பட்டார். அவராகவே வீட்டை விட்டு சென்றது தெரிந்தது.
உத்தர பிரதேசம், லக்னோவை சேர்ந்தவர் விபின் குப்தா, 34. இவர் பெங்களூரின், கொடிகேஹள்ளியின் டாடா நகரில் வசிக்கிறார். மான்யதா டெக்பார்க்கில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன.
சில நாட்களுக்கு முன், வீட்டை விட்டு சென்ற விபின் குப்தா திரும்பவில்லை. இவருக்கு தனியாக ஊர், ஊராக சுற்றும் பழக்கம் இருந்தது.
பல முறை வீட்டை விட்டு சென்று, சில நாட்களுக்கு பின் வீட்டுக்கு வருவார். எனவே, கணவர் தானாகவே வருவார் என, மனைவி ஸ்ரீபர்ணா நினைத்தார். ஆனால், கணவர் வரவில்லை. மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதனால் பீதி அடைந்த மனைவி, தன் கணவரை தேடி தரும்படி கொடிகேஹள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார்.
கணவருக்கு யாராலோ ஆபத்து என, சந்தேகம் தெரிவித்தார். போலீசார் அலட்சியம் காட்டியதால், வீடியோ வாயிலாக கமிஷனருக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து, போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விபின் குப்தாவை தேடினர்.
இதில், அவர் உ.பி., மாநிலம் நொய்டாவில் இருப்பதை கண்டுபிடித்தனர். கொடிகேஹள்ளி போலீசார் நொய்டாவுக்கு சென்று, அவரை பெங்களூருக்கு அழைத்து வந்தனர். விசாரித்த போது, தானாக விரும்பியே வீட்டை விட்டு சென்றதாக கூறினார்.
விபின் குப்தாவுக்கு 34 வயது. இவரது மனைவி ஸ்ரீபர்ணாவுக்கு 42 வயது. மனைவி தன்னை விட, வயதில் பெரியவராக இருந்ததால், விபின் குப்தா மன வருத்தத்தில் இருந்தார். மனைவியும் இவரை மனரீதியில் இம்சித்துள்ளார். கணவர் தன்னை விட இளையவர் என்பதால், சந்தேக கண்ணோடு இருந்துள்ளார். கணவரை கண்காணிக்க, வீடுகளில் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.
மனைவியின் செயலால் விரக்தி அடைந்த விபின் குப்தா, வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டின் அருகில் இருந்த வங்கியில், 1.80 லட்சம் ரூபாய் எடுத்து கொண்டு நொய்டாவுக்கு சென்றதை ஒப்புக்கொண்டார். இவரை மனைவியிடம் ஒப்படைக்க போலீசார் தயாராகின்றனர்.
ஆனால் விபின் குப்தா, 'வேண்டுமானால் என்னை சிறையில் கூட அடையுங்கள். ஆனால், வீட்டுக்கு மட்டும் செல்ல மாட்டேன்' என பிடிவாதம் பிடிக்கிறார். அவரை சமாதானம் செய்ய போலீசார் முயற்சிக்கின்றனர்.