/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கார் ஓட்டுனராக மாறிய இல்லத்தரசிகள் 60 பேருக்கு ஹொசஹள்ளியில் பாராட்டு
/
கார் ஓட்டுனராக மாறிய இல்லத்தரசிகள் 60 பேருக்கு ஹொசஹள்ளியில் பாராட்டு
கார் ஓட்டுனராக மாறிய இல்லத்தரசிகள் 60 பேருக்கு ஹொசஹள்ளியில் பாராட்டு
கார் ஓட்டுனராக மாறிய இல்லத்தரசிகள் 60 பேருக்கு ஹொசஹள்ளியில் பாராட்டு
UPDATED : நவ 29, 2024 03:36 PM
ADDED : நவ 28, 2024 11:58 PM

ஹொசஹள்ளி; தொழில் முனைவோர்களாக மாற்றும், 'அவேக்' அமைப்பின் மூலம், 60 பெண்கள் கார் ஓட்டுனர்களாக மாறி சாதித்து உள்ளனர்.
'அவேக்' எனும் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் அமைப்பு, கடந்த 41 ஆண்டுகளாக பெங்களூரு ஹொசஹள்ளியில் இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு, பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. பேக்கரி பொருட்கள், சாக்லேட், கைவினை பொருட்கள் போன்றவை தயாரிப்பது பற்றி கற்று கொடுக்கிறது.
சாதிக்க துடிப்பு
பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி வருகிறது.
இந்த அமைப்பு சமீபத்தில், கிராமம், நகரங்களில் உள்ள சாதிக்க துடிக்கும் 60 பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்தது. இதற்கு ஒரு சிறு தொகையும் வசூலிக்கப்பட்டது.
மொத்தம் 20 நாட்கள் நடந்த பயிற்சியில், அனைவரும் கார் ஓட்டி தகுதியான டிரைவர்களாக மாறியுள்ளனர்.
இவர்களை பாராட்டும் வகையில் நேற்று, ஹொசஹள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது. இத்துடன், பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
'அவேக்' தலைவர் ஆஷா, செயலர் ஜெகதீஸ்வரி, பெங்களூரு மேற்கு போக்குவரத்து கமிஷனர் அனிதா ஹாடன்வர், பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
இரவில் தைரியம்
ஜெகதீஸ்வரி கூறுகையில், ''கார், டாக்சி ஓட்டுனராக பெண்கள் மாறினால், மாதத்திற்கு 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்; கிராமங்களில் வசிப்போர் நகரங்களுக்கு வராமல், உள்ளூரில் இருந்து கார், டாக்சி ஓட்டி பணம் சம்பாதிக்கலாம். இரவு நேரங்களில் தைரியமாக காரில் பயணிக்கலாம்.
''பிடதியில் உள்ள என் சொந்த நிலத்தில், 3.5 ஏக்கரில், பெண்களுக்கான ஓட்டுனர் பயிற்சி மையம் அமைக்கப்படும். இதன் மூலம் டிராக்டர் ஓட்டுவதற்கும் பயிற்சி பெறலாம்,'' என்றார்.
கார் ஓட்ட கற்று கொண்ட சுவாதி கூறுகையில், ''இந்த பயிற்சியின் மூலம், சிறப்பான ஓட்டுனராக மாறியுள்ளேன்
''என் கணவர், கார் ஓட்டும் போது, நான் பயப்படாமல் வேடிக்கை பார்த்த படியே பயணம் செய்வேன். தற்போது, நான் கார் ஓட்டும் போது, என் கணவர் மிகவும் பயப்படுகிறார்.
''என் குழந்தைகளை அழைத்து வருவதற்கு கூட, என்னை நம்பி காரை தர மறுக்கிறார்.
''பெண்கள் எவ்வளவு திறமையை வளர்த்து கொண்டாலும், வீட்டில் உள்ள ஆண்கள், அவர்களை நம்ப வேண்டும்,'' என்றார்.
கார் ஓட்ட கற்று கொண்டவர்கள் 29 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.