/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பழநிக்கு பாதயாத்திரை சென்ற ஸ்பெயின் பெண் பக்தர்
/
பழநிக்கு பாதயாத்திரை சென்ற ஸ்பெயின் பெண் பக்தர்
ADDED : பிப் 17, 2024 05:48 AM

மூணாறு, : மூணாறில் இருந்து பழநிக்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா 47, மாலையிட்டு பாதயாத்திரை சென்றார்.
மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலா வந்தபோது மூணாறு போதமேட்டைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி சிவா 32,வுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் பழநிக்கு பாத யாத்திரை சென்று திரும்பியதாக கூறினார். இதனால் அவருக்கும் பழநி சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
கடந்தாண்டு மூணாறுக்கு வந்தவர் சிவாவுடன் பழநி சென்றார். அப்போது மாலையிட்டு, விரதம் இருந்து பழநிக்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்தார்.
இதையடுத்து ஸ்பெயினில் இருந்து கடந்த வாரம் மூணாறுக்கு வந்த மரியா மாலையிட்டு விரதமிருந்து போதமேடு உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண் பக்தர்கள் உள்பட 45 பேர் கொண்ட குழுவுடன் பிப்.14ல் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றார். மூணாறில் இருந்து 120 கி.மீ. தூரம் நடந்து மரியா உள்பட குழுவினர் இன்று (பிப்.17) பழநி சென்றடைகின்றனர். நமது கலாசாரப்படி சேலை உடுத்தி மாலை அணிந்து மரியா செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆண்டுதோறும் பழநிக்கு பாதயாத்திரை செல்ல வேண்டும் என்பது மரியாவின் விருப்பம்.