பழமையான சமண துறவி சிற்பம் உடுமலை அருகே கண்டெடுப்பு
பழமையான சமண துறவி சிற்பம் உடுமலை அருகே கண்டெடுப்பு
UPDATED : ஜூன் 28, 2026 08:14 AM
ADDED : ஜூன் 27, 2026 11:19 PM

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, மடத்துக்குளம், அமராவதி ஆற்றங்கரையில், சாமிநாதபுரம் பகுதியில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்தனர். அதில், சமண துறவியான பார்சுவநாதர் சிலையை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியதாவது:
இந்த சிலை, சமண தீர்த்தங்கரான ஆதிநாதர் எனும் பார்சுவ நாதரை குறிக்கக்கூடியது. விஜயமங்கலத்திற்கு அருகில் இருக்கும் ஜைனபுரம், ஜைனர்கள் அதிகம் வசித்த பகுதி. தற்போது, அது மருவி சீனாபுரமாக அழைக்கப்படுகிறது.
அதேபோல, அக்காலத்தில் வழக்கில் இருந்த, ஆதிநாதபுரம் என்ற பெயர் மருவி, சாமிநாதபுரம் என மாறியிருக்கலாம்.
ஜைனர்களின் வரலாற்று சான்றாக கிடைத்த இந்த சிலை, சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை பாதுகாத்து, இப்பகுதிகளில் சமண மதத்தின் வரலாற்று சான்றுகளை ஆவணப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
