பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை போலீசாரின் வெடிக்காத துப்பாக்கி
பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை போலீசாரின் வெடிக்காத துப்பாக்கி
ADDED : ஜூன் 29, 2026 08:29 AM

சென்னை: திரைப்பட இயக்குநர் பாக்யராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வில், அவரது உடலுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்ட போது, போலீசாரின் துப்பாக்கி பழுதாகி, தோட்டா வெடிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கடந்த, 27ம் தேதி இறந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பாக, துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதை வழங்கப்படும் என, முதல்வர் விஜய் அறிவித்தார். நேற்று பாக்யராஜ் உடலுக்கு பெசன்ட்நகர் மயானத்தில், இறுதி சடங்கு நடந்தது. அப்போது, தமிழக காவல்துறை சார்பாக, காவலர்கள் அணிவகுத்து நின்று, துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர்.
அந்த நேரத்தில், முதல் மற்றும் இரண்டாவது வரிசையில் நின்ற காவலர்களின் துப்பாக்கி வேலை செய்யவில்லை. இரண்டு காவலர்களின் துப்பாக்கிக்குள் தோட்டா சிக்கிக் கொண்டது; அவர்களால் சுட முடியவில்லை. எனினும், அவர்கள் சுதாரித்து கொண்டு, சுடுவது போன்று துப்பாக்கியை மேல்நோக்கி காண்பித்து சமாளித்தனர். இது, வீடியோவில் தெளிவாக தெரிந்தது. ஒரு அரசு மரியாதை நிகழ்வில், துப்பாக்கிகள் சரியாக வேலை செய்யாதது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
