/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'சர்பிங்'கில் சாதிக்கும் அனீஷா; கடல் அலையில் சறுக்கி சாகசம்
/
'சர்பிங்'கில் சாதிக்கும் அனீஷா; கடல் அலையில் சறுக்கி சாகசம்
'சர்பிங்'கில் சாதிக்கும் அனீஷா; கடல் அலையில் சறுக்கி சாகசம்
'சர்பிங்'கில் சாதிக்கும் அனீஷா; கடல் அலையில் சறுக்கி சாகசம்
UPDATED : பிப் 04, 2025 09:14 PM
ADDED : பிப் 03, 2025 04:49 AM

- நமது நிருபர் -
பெண்கள் பலரும் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். இதே வேளையில், சில பெண்களை விளையாட அனுமதிக்காத பெற்றோரும் இருக்கின்றனர்.
எது எப்படியோ, பெண் என்பவர், பல சவால்களை தாண்டி வீட்டை விட்டு வெளியே வந்து, தனக்கு பிடித்த துறையில் கடினமாக உழைத்து சாதனை புரிவது சாதாரண விஷயம் அல்ல. அப்படிப்பட சாதனை பெண்களில் ஒருவருடைய கதை தான் இது.
பெண்கள் பலர், விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். பொதுவாக இறகுப்பந்து, டென்னிஸ், கோ கோ, ஹாக்கி என பல போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர்.
கடலில் நடக்கும் திகிலான போட்டிகளில் சிறந்து விளங்குவோரை விரல் விட்டு எண்ணி விடலாம்.
கடல் ஆர்வம்
இந்த வரிசையில் முதலாவதாக நிற்கிறார், நம்ம மாநில பெண் அனீஷா நாயக், 25. மங்களூரை சேர்ந்தவர்.
இவருக்கு சிறுவயதில் இருந்தே அறிவியலிலும், கடல் மீதும் ஆர்வம் இருந்து வந்து உள்ளது.
சிறுவயதில் கடலில் விளையாடும் 'சர்பிங்' எனும் கடல் அலைகளில் சறுக்கும் விளையாட்டை பார்த்து உள்ளார்.
இதை பார்த்த அவருக்கு தானும், சர்பிங்கில் சாதிக்க வேண்டும் என யோசித்து உள்ளார்.
ஆனால், கடலில் விளையாடும் விளையாட்டு என்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பெற்றோர் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஆனால், அவர் விடாப்பிடியாக கடலினுள் இறங்கி விட்டார். நம்பி வந்தவர்களை கைவிடாத 'கடல் அம்மா' இவரையும் கைவிடவில்லை.
கடல் மேல் கொண்ட ஆசையில் தனது 12 வயதிலே சர்பிங் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். இந்த சிறுவயதில், கடல் மீது அவர் காட்டிய வித்தையை பார்த்த பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
நாட்கள் செல்ல, செல்ல வீட்டில் இருப்பதை விட, கடலிலே அதிக நேரம் இருந்து உள்ளார். ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் பயிற்சி செய்து உள்ளார்.
தேசியம்
தனது பள்ளி பருவத்தின் போதே, மாவட்ட, மாநில அளவிலான சர்பிங் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று உள்ளார். இதன் மூலம், இவரது புகழ் மாநிலத்தை தாண்டி, தேசிய அளவில் வெளிப்பட்டது.
இந்திய அளவிலான சர்பிங் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக, அப்போட்டியில் இருந்து விலகினார். பின், மீண்டும் பல முயற்சிகளக்கு பின் 2015 ல் நடந்த ஆசிய அளவிலான சர்பிங் போட்டியில் பங்கு பெற்றார்.
அதே வேளையில் படிப்பிலும், அறிவியல் பாடத்திலும் கவனம் செலுத்தி வந்தார்.
பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சி போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வார்.
இதன் விளைவாக, 9ம் வகுப்பு படிக்கும் போது, 2016 ல் அமெரிக்காவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கமும் வென்றார்.
இப்படி தன் சிறுவயதிலே அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
பதிலடி
அனீஷா தனது பதின் பருவத்திற்கு வந்தவுடன், அவரது உறவினர்கள் சர்பிங் செய்வதை கடுமையாக எதிர்த்து உள்ளனர்.
'பெண்கள் குட்டை உடைகளை அணிந்து கொண்டு, அனைவர் முன்நிலையிலும் கடலில் விளையாடுவதா, இப்படியே போனால் உன்னை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை கேட்டு மனமுடைந்த அவருக்கு, தாய் ஷைலா பக்தா உறுதுணையாக இருந்துள்ளார்.
தாயின் வார்த்தைகள் கேட்டு மீண்டும் சர்பிங்கில் திறமையை வெளிப்படுத்த துவங்கினார். இதன்பின், சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றார். இதனிடையே தனது பட்ட படிப்பையும் முடித்தார்.
தற்போது, பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கு உள்ள பெண்களுக்கு சர்பிங் செய்வது குறித்து, பயிற்சி அளித்து வருகிறார்.
இவருக்கு நிலத்தில் இருப்பதை விட, கடலில் இருப்பது தான் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாம்.

