/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
வயிறை மட்டுமல்லாமல் மனதையும் நிரப்பும் அன்னபூரணி
/
வயிறை மட்டுமல்லாமல் மனதையும் நிரப்பும் அன்னபூரணி
UPDATED : ஜன 02, 2025 08:22 PM
ADDED : டிச 29, 2024 11:03 PM

பசியோடு வருவோருக்கு ஹோட்டல்கள் இருக்கின்றன. பசிக்கும் வயிறுக்கு சோறு மட்டுமே கிடைக்கும். அதில் இனிப்பு, உப்பு, காரம், புளி இருக்கும்.
ஆனால், வீட்டில் நம் தாய் உணவு பரிமாறும் போது, 'இன்னும் கொஞ்சம் சாப்பிடு, நல்லா இருக்கிறதா' என்று கேட்பது போன்று யாரும் கேட்கமாட்டார்கள்.
ஆனால், பசித்த வயிறுக்கு உணவும் கொடுத்து, தாய் உள்ளத்தோடு இன்னும் வேண்டுமா என்று கேட்பவர்கள் ஒரு சிலரே. அதில், சவுமியா ராஜுவும் ஒருவர்.
அனுபவம்
பெங்களூரு கெங்கேரி பல்கலைக்கழகம் அருகில் மரியப்பனபாளையா பஸ் நிறுத்தும் அருகில் உள்ளது 'ராஜண்ணா நாட்டி ஸ்டைல்' ஹோட்டல். சிறிய கடை என்றாலும், அவர் பரிமாறும் உணவும், வாஞ்சையோடு பேசுபவதும், இன்னும் சாப்பிட தோன்றும்.
இது குறித்து சவுமியா கூறியதாவது:
ஹுலியரதுர்காவை சேர்ந்த நானும், என் கணவர் ராஜுவும் காதலித்தோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் பிஜந்த், நான்காம் வகுப்பு படிக்கும் ரோஹித் என இரு மகன்கள் உள்ளனர்.
எங்கள் காதலுக்கு சம்மதித்த பெற்றோரை கவுரவப்படுத்த நினைத்தோம். கணவர் ராஜு, ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்தவர்.
அப்போது தான் சொந்தமாக ஹோட்டல் துவங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த ஹோட்டலை துவக்கினோம்.
மற்ற கடைகள் போன்று உணவு தயாரித்தாலும், வாடிக்கையாளர்களுக்கு அவர்களிடம் எவ்வளவு பணம் உள்ளதோ அதற்கு ஏற்றவாறு உணவு தர முடிவு செய்தோம்.
இப்பகுதியில் மாணவர்கள் அதிகளவில் இருப்பதால், எங்கள் ஹோட்டலில் தான் வந்து சாப்பிடுகின்றனர். தரமான, சுவையாக உணவு தயாரிக்கிறோம். இங்கு சாப்பிட்ட எவருக்கும் இதுவரை எந்த உடல்நலம் பாதிப்பும் ஏற்படவில்லை.
பிரியாணி
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வேறு இடத்தில் ஹோட்டல் திறக்க நினைத்தோம். ஆனால் இங்கு வரும் மாணவர்கள், 'அக்கா... தயவு செய்து வேறு இடத்தில் கடை திறக்க வேண்டாம். உங்களிடம் சாப்பிடுவதால் எங்களுக்கு எந்த உடல் உபாதையும் ஏற்படவில்லை. ருசியாகவும் உள்ளது. இந்த ருசி வேறு ஹோட்டல்களில் கிடைப்பதில்லை. எனவே, கடையை மாற்ற வேண்டாம்' என்று கேட்டு கொண்டனர்.
அவர்களின் அன்பு, பாசத்துக்காக, இங்கேயே கடையை நடத்தி வருகிறோம். உணவுக்கு காசு குறைவாக இருந்தாலும், அந்த காசுக்கு ஏற்ற வகையில், அவர்களுக்கு பிடித்த உணவை தருகிறோம்.
உதாரணமாக, பிரியாணி 100 ரூபாய் என்றால், அரை பிரியாணி 50 ரூபாய்க்கு தருகிறோம். இதை விட பணம் குறைவாக இருந்தால், சிறிது பிரியாணி, ஒரு கறி கொடுப்போம். இதனாலேயே பலரும் எங்கள் கடையை விரும்பி தேடி வருகின்றனர்.
தினமும் காலை 7:00 மணிக்கு கடையை திறந்து மதியம் 12:00 மணிக்குள் அனைத்தையும் தயார் செய்து விடுவோம். நள்ளிரவு 12:00 மணி வரை கடை திறந்திருக்கும். அதன்பின், 1:00 மணி வரை சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்த பின், வீட்டுக்கு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கு உணவு சாப்பிட்டவர்கள் கூறுகையில், 'இங்கு மிகவும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் உணவு தயாரிக்கின்றனர். உணவுகள் அனைத்தும் தரமானதாகவும், அதற்கேற்ற விலையிலும் தருகின்றனர்.
'உணவு பறிமாறுவது மட்டுமின்றி, அவர்களின் சொந்த பிள்ளைகள் போன்று எங்களிடம் அனுசரனையாக கேட்கின்றனர். உணவால் வயிறு மட்டுமல்ல, அவர்களின் பாசத்தால் மனதும் நிரம்பி விடுகிறது' என்றனர்.
இத்தம்பதியை பாராட்ட விரும்புவோர், 96637 50588 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
- நமது நிருபர் -.