/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தமிழ்வழி பள்ளி முன்னாள் ஆசிரியையருக்கு மாணவர்கள் நடத்திய பாராட்டு விழா
/
தமிழ்வழி பள்ளி முன்னாள் ஆசிரியையருக்கு மாணவர்கள் நடத்திய பாராட்டு விழா
தமிழ்வழி பள்ளி முன்னாள் ஆசிரியையருக்கு மாணவர்கள் நடத்திய பாராட்டு விழா
தமிழ்வழி பள்ளி முன்னாள் ஆசிரியையருக்கு மாணவர்கள் நடத்திய பாராட்டு விழா
UPDATED : டிச 10, 2024 04:00 PM
ADDED : டிச 09, 2024 06:55 AM

தங்கவயல்: தமிழ்வழிக் கல்வி பயின்ற முன்னாள் மாணவியரை தங்களின் ஆசிரியைகளை கவுரவிக்கும் விழா ராபர்ட்சன்பேட்டை துாய தெரெசா பள்ளியில் நேற்று கோலாகலமாக நடந்தது.
ராபர்ட்சன்பேட்டை துாய தெரெசா பள்ளி, தமிழ்ப் பள்ளியாக துவங்கப்பட்டது. 2012ல் தமிழ் மாணவர்களே இல்லாததால், தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரிய - ஆசிரியையர் வீடு வீடாக சென்று தமிழ்ப் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்குமாறு அழைத்தனர். ஆனால் பயனின்றி போனது. எனவே அதே பள்ளியில், ஆங்கில வழி வகுப்புகளில் சேர்த்து வருகின்றனர்.
எண்ணிக்கை
தெரெசா பள்ளியில் ஆண்டுதோறும் மாணவ - மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழ் வழியில் படிக்க வைக்க, யாருக்கும் ஆர்வமில்லையே என்ற ஏக்கம் தமிழ் வழியில் படித்த முன்னாள் மாணவர்களிடம் மிகையாக உள்ளது.
இப்பள்ளியில் 1989ல் தமிழ் வழியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களை கவுரவிக்கும் விழாவை அதே பள்ளியில் நேற்று நடத்தினர்.
அப்போதைய மாணவர்கள் மேத்யூ தலைமையில் சந்தர், திருமலை, சதீஷ், கஜேந்திரன், விக்டர் புரூஸ்லி, தங்கராஜ்; மாணவியர் சித்ரா மகேஸ்வரி, ஜெய புஷ்பா சுமதி ஆகியோர் இணைந்து விழாவை நடத்தினர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளியின் மேலாளர் அருட்தந்தை அந்தோணி பிரவீன் ராஜ் பேசியதாவது:
பெண்களுக்கும் கல்வி அவசியம் தேவை என்பதை உணர்ந்து ராபர்ட்சன்பேட்டையில் 1933ல் உருவானது துாய தெரெசா ஆரம்பப் பள்ளி. தங்கவயல் கல்வி வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்ற பள்ளி என்பதை பலரும் அறிவர். 1929ல் ராபர்ட்சன்பேட்டையில் துாய தெரெசா ஆலயத்தை அருட்தந்தை ஜப்டினோ ஏற்படுத்தினார்.
சமூக நலன்
ஆலய திருப்பணியுடன் சமூக நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதால் ஆலயத்தில் கல்வி நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. செயின்ட் ஜோசப் மடத்தின் அருட் சகோதரிகள், தெரெசா ஆலய வளாகத்தில் தமிழ்ப் பள்ளியை, 1933ல் எட்டு மாணவர்களுடன் துவக்கினர். பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இப்பள்ளியை ஏற்படுத்தினர்.
மாணவர்களுக்கு 7ம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. எட்டாம் வகுப்புக்கு வேறொரு பள்ளியில் சேர்க்க டிரான்ஸ்பர் சர்டிபிகேட் கொடுத்து அனுப்பினர். ஆனால், மாணவியருக்கு ஆரம்ப பள்ளி முதல் பி.யு.சி., வரையில் படிக்க அனுமதித்தனர். எட்டு தமிழ் மாணவர்களுடன் துவக்கப்பட்ட பள்ளி, தற்போது 3,500 மாணவர்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கொண்டு மிகப் பெரிய கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் ஆசிரியைகள் மங்களம், ஜெசிந்தா, திரேசா, சோபியா, பாத்திமா, ஜோதி, ஸ்டெல்லா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு மாணவர்கள் நினைவு பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினர்.
முன்னாள் மாணவர் மேத்யூ கூறுகையில், ''பல ஆயிரம் பேருக்கு கல்வி அறிவை தந்த இப்பள்ளி, எங்களுக்கு கோவில்; எங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியைகள் எங்கள் தெய்வங்கள்,'' என்றார்.
இதே பள்ளியில் படித்து கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்ரமணியம் சிறப்பு அழைப்பாளராகவும், முன்னாள் மாணவர்கள் அவரவர் குடும்பத்தினருடனும் பங்கேற்றனர்.