ADDED : நவ 13, 2026 02:35 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மோரனப்பள்ளியை சேர்ந்தவர் மணி, 31. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி, 25. கர்ப்பிணியான அவர், ஓசூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னையால், 26 வாரங்களிலேயே புவனேஸ்வரிக்கு பிரசவம் பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டது. வயிற்றில் இருந்த குழந்தையின் எடை குறைவாக இருந்ததால், பிரசவம் பார்க்க தனியார் மருத்துவமனைகள் கைவிரித்தன.
கடந்த ஆக., 10ம் தேதி, ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புவனேஸ்வரிக்கு ஆக., 11ல் குறைபிரசவத்தில், எடை குறைவு மற்றும் சுவாச பிரச்னையுடன் ஆண் குழந்தை பிறந்தது.
அதிதீவிர சிகிச்சை பிரிவில், மூன்று மாதங்களாக மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையால், 1,300 கிராமாக எடை அதிகரித்து, முழு ஆரோக்கியத்துடன் குழந்தை உயிர் பிழைத்தது. அந்த குழந்தையை, பெற்றோரிடம் மருத்துவக்குழுவினர் நேற்று ஒப்படைத்தனர்.
