/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'வின்' பண்ண கண் ஒரு தடை கிடையாது! ஜெயித்துக்காட்டுகிறார் இந்த மாற்றுத்திறனாளி
/
'வின்' பண்ண கண் ஒரு தடை கிடையாது! ஜெயித்துக்காட்டுகிறார் இந்த மாற்றுத்திறனாளி
'வின்' பண்ண கண் ஒரு தடை கிடையாது! ஜெயித்துக்காட்டுகிறார் இந்த மாற்றுத்திறனாளி
'வின்' பண்ண கண் ஒரு தடை கிடையாது! ஜெயித்துக்காட்டுகிறார் இந்த மாற்றுத்திறனாளி
ADDED : ஏப் 03, 2025 05:26 AM

கோவை; தனித்திறமை, விளையாட்டு, விடாமுயற்சி என, எந்த விஷயத்திலும் மாற்றுத்திறனாளிகள் சளைத்தவர்கள் அல்ல. அதிலும், ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்கள், தடைகளை தகர்த்து சாதித்து வருவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
இப்படி, பார்வை குறைபாடுள்ளவர்களுக்கான, 'பாரா 11 டிரெக்' ஓட்டத்தில் சாதித்து வருகிறார் கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்த பிரகதீஷ்வரன்,31. இவரது தந்தை மூர்த்தி ஒர்க்ஷாப் தொழிலாளி, தாய் நாகலட்சுமி இல்லத்தரசி. அண்ணன் நந்தகுமார் பார்வையற்றவர்.
இப்படிப்பட்ட சூழலில், வாழ்க்கையில் வெற்றிபெறும் வெறியுடன், கோவை அரசு கலைக் கல்லுாரியில் எம்.ஏ., ஆங்கிலம் முடித்த பிரகதீஷ்வரன், தேர்வு எழுதி வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 10 ஆண்டுகளாக 'பாரா 11 டிரெக்' 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற அவர் முதல், 9 ஆண்டுகளில் ஒரு வெற்றியும் பெறவில்லை. தன்னம்பிக்கை தளராத அவர் கடும் பயிற்சியால் கடந்தாண்டு மட்டும், தேசிய அளவில் ஆறு தங்க பதக்கம் வென்றுள்ளார்.
தவிர, சர்வதேச போட்டியில் வெண்கலமும் வென்று முன்னேறி வருகிறார். அதேசமயம், பொருளாதாரம் என்பது, அவரது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்துவருவது வேதனைக்குரியது.
இரு மடங்கு செலவு!
பிரகதீஷ்வரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
ஏழை குடும்பத்தில் பிறந்த நான், இளம் வயது முதலே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன், தீவிர பயிற்சியில் இறங்கினேன். தினமும் காலை, மாலை என ஐந்து மணி கடும் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
ஒன்பது ஆண்டுகள் ஒரு வெற்றி கூட பெறாத எனக்கு, பயிற்சியாளராக அமைந்த வைரவநாதன், 'கைடு ரன்னர்' தங்கப்பாண்டியன் ஆகியோரது தன்னம்பிக்கை வரிகள் ,எனது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தின.
அதன்பிறகு கடந்தாண்டில், ஏழு பதக்கங்கள் குவித்தேன். என்னுடைய 'கைடு ரன்னர்' என்னை வழிநடத்தி வருகிறார். என்னை போலவே அவரும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்.
எனக்கு கிடைக்கும் மாத சம்பளத்தில், எனது குடும்பத்தை கவனிப்பது மட்டுமின்றி, இயன்ற அளவு கைடுக்கும் சம்பளம் வழங்கி வருகிறேன்.
மாதம் தோறும் பயிற்சிக்கு செலவு, போட்டிகளுக்கான செலவையும் எனது சம்பளத்தையே சார்ந்துள்ளேன். இரண்டு மடங்கு செலவு செய்ய வேண்டியுள்ளதால் குடும்பம், விளையாட்டு என இரண்டையும் சமாளிப்பது, சிரமமாக இருக்கிறது.
பயிற்சி பெறுவதற்கு அனைத்துக்கும் சேர்த்து, ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வரை செலவாகிறது. தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு நிறைய உதவிகளை செய்கிறது.
எங்களை போன்ற, பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும், வீரர்களின் உயிர் நாடியான கைடு ரன்னர்களுக்கும், பொருளாதார ரீதியாக உதவினால், சர்வதேச அளவில் நம்மால் இன்னும் நிறைய சாதிக்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இவரை தொடர்பு கொண்டு பாராட்டவும், உதவவும்: 97897 20049.
என்னுடைய 'கைடு ரன்னர்' என்னை வழிநடத்தி வருகிறார். என்னை போலவே அவரும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். எனக்கு கிடைக்கும் மாத சம்பளத்தில், எனது குடும்பத்தை கவனிப்பது மட்டுமின்றி, இயன்ற அளவு கைடுக்கும் சம்பளம் வழங்கி வருகிறேன்.

