/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மனிதத்தின் மாண்பு; மரங்கள் மறுவாழ்வு
/
மனிதத்தின் மாண்பு; மரங்கள் மறுவாழ்வு
UPDATED : மார் 04, 2024 02:12 AM
ADDED : மார் 03, 2024 11:39 PM

பல்லடம்:ரோடு பணிக்காக வெட்டுப்பட்டு கிளைகளை இழந்து நின்ற மரங்களுக்கு மறுவாழ்வு கிடைத்த நிலையில், பல்லடம் அருகே, குட்டையில், வேப்ப மர தோப்பு உருவாகியுள்ளது.
பல்லடம், -பொள்ளாச்சி ரோடு, காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலான ரோடு, நெடுஞ்சாலை துறை மூலம் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரோட்டில் இருபுறமும் உள்ள, 253 மரங்கள் வெட்டப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, நிழல் தரும் மரங்கள் அனைத்தும் பரிதாபமாக காட்சியளித்தன. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படங்களுடன் விரிவான செய்தி வெளியானது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, தற்போது, 253 மரங்களுக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.
மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து மாற்று இடத்தில் நடவு செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் சுல்தான்பேட்டையைச் சேர்ந்த அகழ் இயந்திர வாகன உரிமையாளர் கனகராஜ் மூலம், அனைத்து மரங்களும் வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு மறு நடவு செய்யப்பட்டன.
சில மரங்கள், தனியார் இடத்தில் மறுநடவு செய்யப்பட்ட நிலையில், மேலும் சில வேப்ப மரங்கள், பல்லடம் - கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள குட்டையில் நடவு செய்யப்பட்டன. இதனால், நீர் ஆதாரக் குட்டை தற்போது வேப்பந்தோப்பாக காட்சியளிக்கிறது.
ரோடு விரிவாக்கத்துக்காக வெட்டுப்பட்ட மரங்களுக்கு மறுவாழ்வு கிடைத்து தற்போது துளிர் விட துவங்கி உள்ளன.

