/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'விளையாட்டு திறனுக்கு ஊனம் தடையல்ல'
/
'விளையாட்டு திறனுக்கு ஊனம் தடையல்ல'
UPDATED : நவ 29, 2024 03:35 PM
ADDED : நவ 28, 2024 11:57 PM

அனைவருக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்துவிடுவது இல்லை. சிலருக்கு மட்டுமே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி இருக்கும். இவர்களில் சித்தனகவுடா பாட்டீலும் ஒருவராவார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
பெலகாவியின், மெச்சே கிராமத்தின் ஜெயநகரில் வசிப்பவர் தினேஷ் சித்ரகவளி, 28. போலியோவால் பாதிக்கப்பட்ட இவரது, இரண்டு கால்களும் செயல்படவில்லை. சக்கர நாற்காலியில் நடமாடுகிறார்.
மாற்றுத்திறனாளி என்றாலும், உழைத்து சாப்பிட வேண்டும் என்ற மன உறுதி கொண்டவர். உடல் ஊனம் அவரது உழைப்புக்கு தடை போடவில்லை.
நல்ல ஆரோக்கியம், உடற்கட்டு இருந்தாலும், பல இளைஞர்கள் வேலை செய்யாமல் அலைவதை பார்த்திருக்கிறோம். ஆனால் போலியோவால் நடமாட முடியாத நிலையில் இருந்தும், வீட்டில் அமர்ந்திருக்கவில்லை; 'சொமோட்டோ'வில் புட் டெலிவரி வேலை செய்து சம்பாதிக்கிறார்.
'புட் டெலிவரி'
எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். இவரது தந்தை ராமதாஸ் 2008ல் காலமானார். அதன்பின் தாய் கமலா, கூலி வேலை செய்து மகனை காப்பாற்றினார். 2010ல் டெலிகாம் கம்பெனியில் சிம் கார்டு விற்பது உட்பட சிறு, சிறு வேலைகளை செய்தார்.
ஒன்றரை ஆண்டாக இக்கம்பெனியில் புட் டெலிவரி பணி செய்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்புதான், அம்ருதா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். புட் டெலிவரி வேலை செய்து, தாய், மனைவியை காப்பாற்றுகிறார்.
இதற்கு முன் ஹெச்.எம்.டி., நிறுவனம் வழங்கிய மூன்று சக்கர வாகனத்தை, டெலிவரி பணிக்கு தினேஷ் பயன்படுத்தினார். சமீபத்தில் பேட்டரி பிரச்னையால் ரிப்பேர் செய்ய விட்டுள்ளார். தற்போது நண்பரின் பைக்கை பயன்படுத்தி, வேலைக்கு செல்கிறார்.
தங்கம், வெள்ளி
இவர் சிறந்த விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 முதல் இதுவரை, மாநில, தேசிய அளவிலான பாரா டேபிள் டென்னிஸ், சக்கர நாற்காலி கூடைப்பந்து, சக்கர நாற்காலி ரக்பி விளையாட்டில் கோப்பைகள் வென்றுள்ளார்.
சக்கர நாற்காலி ரக்பியில் தேசிய அளவில் தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளார். பாரா டேபிள் டென்னிசில் மாநில அளவில் தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளார். சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டில், தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, வெண்கலம் உட்பட 20 க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றுள்ளார்.
தினேஷ் தற்போது, சங்கமா பைலுராவிடம் டேபிள் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகிறார். சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க, தன்னை தயார்படுத்துகிறார்.
இது தொடர்பாக தினேஷ் கூறியதாவது:
சொமோட்டோவில் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும் என்பது இல்லை. வேலையை விட்டு விட்டு விளையாட்டு பயிற்சிக்கு செல்ல உதவியாக இருக்கும். எனவே, புட் டெலிவரி வேலையை தேர்வு செய்து கொண்டேன்.
உதவி தேவை
விளையாட்டு பயிற்சி சென்டர்கள், முதல் மாடி, இரண்டாவது மாடியில் உள்ளன. பயிற்சிக்கு செல்ல கஷ்டமாக உள்ளது. டேபிள் டென்னிஸ், பால் த்ரோ செய்ய ரோபோடிக் மெஷின் தேவைப்படுகிறது. அரசோ அல்லது நன்கொடையாளர்களோ, எனக்கு வசதி செய்து கொடுத்தால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று வருவேன்.
நான் புட் டெலிவரி செய்வதை, பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் அபார்ட்மென்ட்களில், மேலே சென்று ஆர்டரை சப்ளை செய்ய முடியாததால், மேலே வர முடியவில்லை என்றால், இந்த வேலைக்கு ஏன் வர வேண்டும் என, கேட்டு மனசை நோகடிக்கின்றனர். அனைத்தையும் சகித்து கொள்கிறேன். சிலரிடம் மனிதாபிமானமும் உள்ளது.
கடவுள் கொடுத்த உடலை வீணாக்காமல், உழைக்க வேண்டும். உழைக்கா விட்டால் சமுதாயத்தில் மரியாதை இருக்காது. ஒருவேளை என் ஒரு கை மற்றும் கண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், நான் உழைப்பை விட்டிருக்க மாட்டேன். யாரையும் சார்ந்திருக்க எனக்கு விருப்பம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

