/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
‛தலைக்கு மேலே' கிடைத்தது நல்ல வேலை!
/
‛தலைக்கு மேலே' கிடைத்தது நல்ல வேலை!
UPDATED : அக் 26, 2025 09:47 AM
ADDED : அக் 26, 2025 02:51 AM

மனசுக்கு பிடிச்சத செய்யணும்...
எல்லோருக்கும் வரும் இந்த நினைப்பு. ஆனால், காலச்சூழல் சில நேரங்களில் மாற்றி விடுகிறது. சமுதாயம், குடும்பம், எதிர்காலம் போன்ற தடைகளை துாக்கி துார போட்டு விட்டு, தில்லுடன் களம் காண்பவர்களுக்கு, வாழ்க்கை ரசனையான ஒன்றாக மாறி விடுகிறது.
இதை நிரூபிப்பவராக இருக்கிறார், குனியமுத்துாரை சேர்ந்த 26 வயது இளைஞர் சஞ்சித். பி.காம்., சி.ஏ., படித்து முடித்தவுடன், கொரோனா லாக்டவுன் துவங்கி விட்டது.
வேலை தேடலாம் என்று முயற்சி செய்தபோது, இருப்பவர்களுக்கே இங்கே வேலை இல்லை' என்று கண்டுகொண்டார்.
கொரோனா காலத்தில் கடைகள் எல்லாம் மூடியிருக்க, முடி திருத்தம் செய்ய முடியாமல் பலர் தவித்தது கண்கூடு. மொபைல் போன் தேடலில், எப்படி முடி வெட்டுவது என ஆராய்ந்தார். ஆர்வம் அதிகரித்தது. அதிலேயே சில விஷயங்களை கற்றுக்கொண்டார்.
நண்பர்களிடம் துவங்கியது பரிசோதனை முயற்சி. மச்சான்... நல்லா ஹேர் கட் பண்றியே...' என்று பாராட்டு தெரிவிக்க, ஏன் இதை தொடர கூடாது என்று கேள்வி கேட்டது மனசு. வளமான எதிர்காலத்துக்கு விதை போட்ட தருணம் அது.
லாக்டவுன் முடிந்து, ராமநாதபுரத்தில் ஒரு சலுான் கடையில், ஒன்றரை வருடங்கள், சில அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டார்.
சுந்தராபுரம் அருகே காந்திநகரில் உள்ள, ஹி அண்ட் ஷி' சலுானில் சேர்ந்து முறையாக கற்றுக்கொண்டார்.
அதன் பின் நடந்ததை, அவரே கூறுகிறார்...!
என் விருப்பத்தை, குடும்பத்தினரிடம் சொல்லியவுடன், எதிர்ப்பு எழவே செய்தது. ஆனாலும், எனக்கு பிடிச்சதை செய்கிறேன் என்றவுடன், நாளடைவில் அவர்களும் பச்சைக் கொடி காட்டி விட்டனர்.
தற்போது பணிபுரியும் சலுான் உரிமையாளர் செல்வராஜ், இதிலிருக்கும் வித்தைகளை கற்றுக்கொடுத்து, குனியமுத்துாரில் இருந்த கடையை தனியாக பார்த்துக் கொள்ள அனுமதித்து விட்டார்.
மனதுக்கு பிடித்ததை செய்வதால், நிம்மதியாக இருக்கிறேன். என் மனைவி எனக்கு மிகப்பெரிய பக்கபலம்.

