நாடு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்கு பின் கிராமத்துக்கு அரசு பஸ் சேவை
நாடு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்கு பின் கிராமத்துக்கு அரசு பஸ் சேவை
ADDED : ஆக 09, 2026 01:24 AM

ஜெய்ப்பூர்: சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் கடந்த பின், முதல் முறையாக ராஜஸ்தானின் குர்தால் கிராமத்துக்கு அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதை கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள அஜ்மீர் மாவட்டம், கேக்ரி நகருக்கு அருகே குர்தால் மற்றும் கெரோட் கிராமங்கள் உள்ளன.
இந்த இரு கிராமங்களுக்கு இதுவரை, ராஜஸ்தான் அரசு பஸ் சேவை வழங்கப்படாமல் இருந்தது.
பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்து வசதி இல்லாததால், மக்கள் தனியார் வாகனங்கள் அல்லது பல கிலோமீட்டர் துாரம் நடந்து சென்று, அங்கிருந்து பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வந்தனர்.
நீண்ட காலமாக அரசு பஸ் சேவை வழங்க கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், அதற்கு போக்குவரத்து கழகம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து சுதந்திரம் பெற்ற 79 ஆண்டுகளில் முதல் முறையாக அந்த கிராமங்களுக்கு அரசு பஸ் நேற்று வந்தது. மக்கள் மலர்கள் துாவி, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க நடனமாடி வரவேற்றனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
