குட்கா கடத்தல் கார்: 40 கி.மீ., 'சேஸிங்' தப்பிக்க முயன்ற இருவர் கை முறிந்தது
குட்கா கடத்தல் கார்: 40 கி.மீ., 'சேஸிங்' தப்பிக்க முயன்ற இருவர் கை முறிந்தது
ADDED : செப் 29, 2026 01:29 AM

அன்னுார்: கோவையில் போலீஸ் ஏட்டுடன், 40 கி.மீ., துாரம் காரில் சென்று தப்பிக்க முயன்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு கை முறிந்தது
கோவை மாவட்டம், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், விளாங்குறிச்சி சாலையில், நேற்று முன்தினம் காலை போலீஸ் எஸ்.ஐ., விக்னேஷ், ஏட்டு வேல்முருகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரில் இருந்து காரில் வந்த மூன்று பேர் கும்பல் சோதனையின் போது எஸ்.ஐ.,யை தள்ளி விட்டுவிட்டு தப்பித்தது. ஏட்டு வேல்முருகன் காரின் மேற்கூரையில் படுத்தபடி 40 கி.மீ., பயணித்தார். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவிநாசி அருகே கடத்தல் காரை மடக்கிப் பிடித்தன. காரிலிருந்து 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கார் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜஸ்தானை சேர்ந்த ராஜேஷ், சுரேஷ், பாபு தாரா ஆகியோர் மீது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரை கொலை செய்ய முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, சூலுார் செல்லும் வழியில் சம்பவ இடத்திற்கு மூவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது ராஜேஷ்,23, சுரேஷ்,20, அங்கிருந்த பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பிக் முயன்றனர். இதில் ராஜேசுக்கு வலது கையிலும், சுரேசுக்கு இடது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
போலீசார் அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு குற்றவாளியான பாபு தாரா, 27, அங்கு காவலில் வைக்கப் பட்டுள்ளார்.
