/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
திருடின டூவீலரை திரும்ப கொடுத்தால் பணம், பட்டாசு, புது டிரஸ், ஸ்வீட் பாக்ஸ் தந்து சந்தோஷமா தீபாவளி கொண்டாட வைக்கிறேன்

UPDATED : செப் 28, 2024 12:35 PM
ADDED : செப் 28, 2024 05:16 AM

மதுரைச ''அம்மா கஷ்டப்பட்டு சீட்டு கட்டி ஆசையா வாங்கிக்கொடுத்த என் டூவீலரை(ஹீரோ ஸ்ப்லன்டர்) திருடியவர், திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 ஆயிரம் தர்றேன். அதோடு பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ், குடும்பத்திற்கு புது டிரஸ் எடுத்து தந்து தீபாவளியை சந்தோஷமா கொண்டாட வைக்கிறேன்'' என அம்மா சென்டிமென்ட்டால் கண் கலங்குகிறார் மதுரை மாநகராட்சி பணியாளர் கார்த்திகேயன்.
மதுரை பொன்மேனி புதுாரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 42. கடந்த 1998ல் மாநகராட்சி ஊழியரான தந்தை வேல்முருகன் இறந்த நிலையில் அவரது வாரிசு பணி கார்த்திகேயனுக்கு கிடைத்தது. தினமும் மாநகராட்சி அலுவலகத்திற்கு மகன் நடந்துசென்றதை பார்த்த தாயார் கருப்பாயி, சீட்டு கட்டி சேர்த்த பணத்தில் 2002ல் டூவீலர் வாங்கிக்கொடுத்தார். அன்று முதல் அந்த டூவீலரை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் செப்.12ல் பைபாஸ் ரோட்டில் தனியார் மருத்துவமனை முன் இவரது டூவீலர் திருடுபோனது. கண் கலங்கி போன கார்த்திகேயன், போலீசில் புகார் கொடுத்தும், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போஸ்டர் ஒட்டி தேடி வருகிறார்.
அதில், டூவீலரை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளான அந்த டூவீலரின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம்தான். அந்த டூவீலருக்காக ரூ.5 ஆயிரம் செலவழித்து போஸ்டர் ஒட்டியுள்ளார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
எனது அம்மா இறந்த நிலையில் இரு ஆண்டுகளாக அவர் நினைவாக டூவீலரை பராமரித்து வருகிறேன். அந்த டூவீலரில் செல்லும்போது அவருடன் செல்லும் உணர்வு ஏற்படும்.
டூவீலர் திருடுபோனதால் அம்மாவை மீண்டும் இழந்ததாக உணர்கிறேன். நவீன வசதிகளுடன் புதிய டூவீலர் என்னால் வாங்க முடியும். ஆனால் அதில் அம்மா பாசம், உணர்வு இருக்காது.
டூவீலரை திருடியவர் எனக்கு போன் செய்து ஒப்படைத்துவிட்டால் அவருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தீபாவளிக்காக டிரஸ் எடுத்துக் கொடுத்து பட்டாசு ஸ்வீட் வாங்கி கொடுப்பேன் என்றார்.