/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
13 நிமிடங்களில் 13 கி.மீ., பறந்த இதயம் அவசர தேவைக்கு உதவிய மெட்ரோ ரயில்
/
13 நிமிடங்களில் 13 கி.மீ., பறந்த இதயம் அவசர தேவைக்கு உதவிய மெட்ரோ ரயில்
13 நிமிடங்களில் 13 கி.மீ., பறந்த இதயம் அவசர தேவைக்கு உதவிய மெட்ரோ ரயில்
13 நிமிடங்களில் 13 கி.மீ., பறந்த இதயம் அவசர தேவைக்கு உதவிய மெட்ரோ ரயில்
ADDED : ஜன 19, 2025 02:05 AM

ஹைதராபாத், தெலுங்கானாவில், தானம் பெறப்பட்ட இதயம் 13 கி.மீ., துாரத்தை, 13 நிமிடங்களில் கடந்து உரிய இடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது. இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்தது.
உயிரிழந்த நபர்களின் உறுப்புகள், மூளைச்சாவு அடைந்தவர்களின் இதயம் உள்ளிட்ட உடலுறுப்புகள் வேறொருவருக்கு பொருத்துவதன் வாயிலாக, மரணத்தின் விளிம்பு வரை சென்ற பலர் உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக சமீப காலமாக உடல் உறுப்பு தானம் அதிகளவில் நடந்து வருகிறது.
அவ்வாறு தானமாக அளிக்கப்படும் உறுப்புகளை, சரியான நபர்களுக்கு, சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பது என்பது டாக்டர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
இங்கு, எல்.பி., நகரின் காமினேனி மருத்துவமனையில் ஒருவரிடம் தானமாக பெறப்பட்ட இதயத்தை, லக்டிகாபுல் என்ற பகுதியில் உள்ள கிளெனிகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு பொருத்துவதற்காக எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த இரண்டு மருத்துவமனைக்கும் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால், சரியான நேரத்தில் இதயத்தை கொண்டு செல்வதில் சிக்கல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மெட்ரோ ரயில் வசதியை பயன்படுத்த முடிவு செய்த டாக்டர்கள் குழு, இதுகுறித்து ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஆலோசனை செய்தது.
எல்.பி., நகர் மற்றும் லக்டிகாபுல் ஆகிய பகுதிகளில் உள்ள இரு மருத்துவமனைகளும், சிவப்பு வழித்தடத்தில் இருந்த நிலையில், அந்த வழியாக எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படும் என்பதால், பிரத்யேகமாக பச்சை வழித் தடத்தின் வழியாக இதயம் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன், எந்த இடையூறுமின்றி டாக்டர்களால் திட்டமிட்டபடி, 13 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கடந்து, குளோபல் மருத்துவமனைக்கு இதயம் எடுத்துச் செல்லப்பட்டது.
மொத்தமுள்ள 13 கி.மீ., துாரத்தை, 13 நிமிடங்களில் கடந்த இதயம், உரிய நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப் பட்டது.

