/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பிளாஸ்டிக் கழிவுகளில் ரோடு அமைக்கும் ஊராட்சி: மற்ற ஊராட்சிகளுக்கு எடுத்துகாட்டு ரெகுநாதபுரம்
/
பிளாஸ்டிக் கழிவுகளில் ரோடு அமைக்கும் ஊராட்சி: மற்ற ஊராட்சிகளுக்கு எடுத்துகாட்டு ரெகுநாதபுரம்
பிளாஸ்டிக் கழிவுகளில் ரோடு அமைக்கும் ஊராட்சி: மற்ற ஊராட்சிகளுக்கு எடுத்துகாட்டு ரெகுநாதபுரம்
பிளாஸ்டிக் கழிவுகளில் ரோடு அமைக்கும் ஊராட்சி: மற்ற ஊராட்சிகளுக்கு எடுத்துகாட்டு ரெகுநாதபுரம்
UPDATED : பிப் 21, 2024 10:41 AM
ADDED : பிப் 20, 2024 10:59 PM

ரெகுநாதபுரம் : பிளாஸ்டிக் கழிவுகளை துாள் துாளக்கி அவற்றை பயன்படுத்தி ரோடு அமைக்கும் பணியில் ஈடுபட்டு மற்ற ஊராட்சிகளுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ரெகுநாதபுரம் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். சுற்றுவட்டாரத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியாக விளங்குகிறது. ரெகுநாதபுரம் ஊராட்சியில் நாள்தோறும் இரண்டு டன்னிற்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பை தேங்குகிறது.
அவற்றை துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அகற்றி மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதனடிப்படையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
ஒரு இயந்திரத்தில் பிளாஸ்டிக் குப்பையில் உள்ள துாசிகள் கம்ப்ரசர் முறையில் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு அவை சேகரிக்கப்பட்டு மற்றொரு அரவை இயந்திரத்தில் சிறு சிறு துகள்களாக அரைத்து வைக்கப்படுகிறது.
இதுபோல் ரெகுநாதபுரம் ஊராட்சியில் மக்களிடம் பிளாஸ்டிக் குப்பையை கிலோ ரூ.12 வீதம் ஊராட்சி நிர்வாகம் விலைக்கு வாங்குவதால் பொது மக்களுக்கு வருவாய் கிடைப்பதோடு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த 2001ல் பிளாஸ்டிக் குப்பையில் சாலை அமைப்பது குறித்து வெற்றிகரமாக செயல்பட்ட மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பத்மஸ்ரீ விருது பெற்ற வாசுதேவன் ஆலோசனையின் பேரில் ரூ.10 லட்சத்திற்கு பிளாஸ்டிக் குப்பை அரைக்கும் இயந்திரம் வாங்கப்பட்டது.
தார் சாலை அமைக்கும் போது சூடேற்றப்பட்ட ஜல்லிக்கற்கள் மீது பிளாஸ்டிக் துகள்களை துாவ வேண்டும். அவற்றில் பிளாஸ்டிக் படிவமாக பரவும். பின்னர் அவற்றின் மீது தார் ஊற்றும் போது உறுதித் தன்மை வாய்ந்த தார் சாலை கிடைக்கும். குறைந்தது 15 ஆண்டுகளுக்கு இதன் பயன்பாடு இருக்கும்.
இந்த பிளாஸ்டிக் சாலையில் மழை நீர் உட்புகாது. வெடிப்பு ஏற்படாது. பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் ஊராட்சியில் இருந்து குப்பை பெறப்பட்டு அவற்றை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம் என்றார்.
திருப்புல்லாணி யூனியன் பி.டி.ஓ., ராஜேந்திரன் கூறுகையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பிளாஸ்டிக் குப்பையை தரம் பிரித்து ரெகுநாதபுரத்தில் வழங்கிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் குப்பை தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தாமல் மறுசுழற்சிக்கு பயன்பட உள்ளது என்றார்.

