/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
அயோத்தியிலிருந்து காசிக்கு 'ராம ஜோதி' முஸ்லிம் பெண்கள் 'புனித யாத்திரை'
/
அயோத்தியிலிருந்து காசிக்கு 'ராம ஜோதி' முஸ்லிம் பெண்கள் 'புனித யாத்திரை'
அயோத்தியிலிருந்து காசிக்கு 'ராம ஜோதி' முஸ்லிம் பெண்கள் 'புனித யாத்திரை'
அயோத்தியிலிருந்து காசிக்கு 'ராம ஜோதி' முஸ்லிம் பெண்கள் 'புனித யாத்திரை'
ADDED : ஜன 07, 2024 01:15 AM

வாரணாசி, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகிய முஸ்லிம் பெண்கள், அயோத்தியில் இருந்து காசிக்கு ராம ஜோதியை கொண்டு வந்து, முஸ்லிம் சமூகத்தினரிடையே ராமர் குறித்து போதிக்கவுள்ளனர்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா, வரும் 22ல் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, வாரணாசியைச் சேர்ந்த நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகிய முஸ்லிம் பெண்கள், ராம ஜோதியை கொண்டு வர அயோத்திக்கு நேற்று புறப்பட்டனர்.
இவர்கள் அயோத்திக்குச் சென்று, ராம ஜோதியை வாரணாசியில் உள்ள காசிக்கு கொண்டு வர உள்ளனர். மேலும் அதனுடன், அயோத்தி மண் மற்றும் சரயு நதியின் புனித நீரையும் எடுத்து வர உள்ளனர்.
இன்று அவர்கள், ராம ஜோதியுடன் காசியை வந்தடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, கடவுள் ராமரின் போதனைகளை வழங்க உள்ளனர்.
பனாரஸ் ஹிந்து பல்கலையில் மேலாண்மை பயின்ற நஸ்னீன் அன்சாரி, ஹனுமன் சாலிசா, ராம்சரித் மனாஸ் ஆகியவற்றை உருதுவில் மொழிபெயர்த்துள்ளார்.
மேலும் அவர், கடவுள் ராமரின் பக்தியை மையமாக வைத்து சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பனாரஸ் ஹிந்து பல்கலையில் முனைவர் பட்டம் பயின்ற நஜ்மா பர்வீன், 17 ஆண்டுகளாக ராம பக்தியில் ஈடுபட்டு உள்ளார். இவர், ஹிந்து - முஸ்லிம் கருத்தரங்கு வாயிலாக, நாடு முழுதும் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே ஒற்றுமையை வளர்த்து வருகிறார்.
நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வின் ஆகியோர், 'முத்தலாக்'கை எதிர்த்துப் போராடியவர்கள். இவர்களுக்கு ஏராளமான முஸ்லிம் பெண்களின் ஆதரவு உள்ளது.
இது குறித்து, நஸ்னீன் அன்சாரி கூறுகையில், ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதில் மகிழ்ச்சி. கடவுள் ராமர் எங்கள் மூதாதையர். ஒருவர் மதம் மாறலாம்; ஆனால் மூதாதையரை மாற்ற முடியாது.
''முஸ்லிம்களுக்கு மெக்கா இருப்பது போல், ஹிந்துக்களுக்கும், இந்திய கலாசாரத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் புனிதமான இடமாக அயோத்தி இருக்கும்,'' என்றார்.