/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஆடிக்காற்றில் உடைந்து பறந்த அரசு பஸ் கூரை
/
ஆடிக்காற்றில் உடைந்து பறந்த அரசு பஸ் கூரை
ADDED : ஜூலை 30, 2025 12:30 AM

வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஆடி காற்றின் வேகத்தை சமாளிக்க முடியாமல் அரசு டவுன் பஸ் கூரை உடைந்து பறந்தது. பஸ்சை ஓரமாக நிறுத்தி பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
வடமதுரை குருந்தம்பட்டியில் இருந்து நேற்று காலை 11:30 மணிக்கு அரசு டவுன் பஸ் திண்டுக்கல் சென்றது. வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் கூரை தகரம் பல துண்டுகளாக உடைந்து காற்றில் பறந்தது.
அருகில் யாரும் இல்லாததால் பறந்த தகரம் யாரையும் பதம்பார்க்கவில்லை. ஒரு தகரம் ஆபத்தாக பஸ் பக்கவாட்டில் தொங்கியது. தொடர்ந்து ஓட்டினால் தகரம் மேலும் பறந்து பலரை பாதிக்கும் என்பதால் பஸ்சை அங்கேயே நிறுத்தினர்.
பஸ்சில் இருந்த 25 பயணிகளையும் மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தனர். பக்கவாட்டில் தொங்கிய தகரத்தை பஸ்சுடன் சேர்த்து கட்டி மெதுவாக ஓட்டி டெப்போவிற்கு கொண்டு சென்றனர். அரசு பஸ்களின் பராமரிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இதுபோன்ற பஸ்களே சாட்சி என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.