ரூ.2.53 கோடி ஜிஎஸ்டி: 71 வயது மூதாட்டி அதிர்ச்சி
ரூ.2.53 கோடி ஜிஎஸ்டி: 71 வயது மூதாட்டி அதிர்ச்சி
ADDED : செப் 01, 2026 04:06 AM

கிருஷ்ணகிரி: தனது ஆதார், பான் கார்டை பயன்படுத்தி, 2.53 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் மூதாட்டி லட்சுமி, 71, மனு அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, இந்திரா நகரை சேர்ந்த லட்சுமி, கணவரை இழந்தவர். மகன் ராமகிருஷ்ணன், 37, என்பவருடன் வசிக்கிறார். கூலி தொழிலாளியான லட்சுமிக்கு, இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது.
சில தினங்களுக்கு முன் லட்சுமி, வங்கியில் பணம் எடுக்க சென்ற போது, 'உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. உங்கள் 'எல்.ஆர்.என்., இம்பெக்ஸ்' கம்பெனி கட்ட வேண்டிய, 2.53 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வரியை கட்டுங்கள். அப்போது தான் வங்கி கணக்கு விடுவிக்கப்படும்' என, வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த லட்சுமி, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில், நேற்று மனு அளித்தார். அதில், 'வணிக வரித்துறை குறிப்பிட்ட நிறுவனத்திற்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆதார், பான் அட்டை நகல்களை தவறாக பயன்படுத்தி, போலி ஜி.எஸ்.டி., பதிவு பெற்று, 2.53 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
என் மகன் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மோசடி குறித்து விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
