திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பும் கண்டக்டர் வினோதினி
திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பும் கண்டக்டர் வினோதினி
UPDATED : ஆக 31, 2026 02:31 PM
ADDED : ஆக 30, 2026 06:52 PM

கோவை: திருநங்கையரில் சுயதொழில் மரியாதையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். அப்படி இன்று பயணிகள் மத்தியில் மரியாதைக்குரியவராக இருப்பவர்தான் 25 வயதுடைய கண்டக்டர் வினோதினி.
பழநியை சொந்த ஊராக கொண்ட இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு செல்வபுரத்தில் குடியேறினார். பாலின மாற்றம் செய்துகொண்ட அவர் துவக்கத்தில் சமையல், கார் டிரைவிங் வேலைகளை செய்துவந்தார். இரு ஆண்டுக்கு முன்பு 'கண்டக்டர் பேட்ஜ்' எடுத்துக்கொண்டு பணியில் சேர முயற்சி செய்து வந்தார்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக தலைமை கிளையை அணுகிய அவருக்கு, தற்காலிக கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.
''பத்தாம் வகுப்பு படித்த எனக்கு, சிறு வயது முதலே கண்டக்டர் ஆக ஆசை. 'பேட்ஜ்' எடுத்தும் ஓராண்டுக்கும் மேலாக வேலை கிடைக்காமல் அலைந்தேன். போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக அதிகாரிகளை அணுகியபோது வாழ்வில் மீண்டுவர நம்பிக்கையுடன் எனக்கு வாய்ப்பளித்தார்.
என்னுடன் பிறந்தவர்கள், சக திருநங்கைகள் எனது ஆசை நிறைவேற உறுதுணையாக இருந்தனர். 5, ஏ1 அரசு டவுன் பஸ்களை அடுத்து, தற்போது சிவானந்தாகாலனி செல்லும் 5சி பஸ்சில் வேலை பார்க்கிறேன். இந்த அரசு எனது வேலையை நிரந்தரமாக்க வேண்டும்,'' என்றார்.
''பயணிகளிடம் எனக்கு மரியாதை கிடைக்கிறது. சக ஊழியர்களும் அன்பாக பழகுகின்றனர். அதுவே சந்தோஷம்தான். திருநங்கை சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். திருநங்கைகள் சாதிக்க வேண்டும்; கீழே இருந்து மேல் நிலைக்கு உயர வேண்டும்''
